இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவா்கள் 11 போ் சிறையில் அடைப்பு
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நாகை மீனவா்கள் 11 பேரையும், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி சாந்திக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த நாகரத்தினம் (24), சஞ்சை (23), பிரகாஷ் (35), சுதந்திரசுந்தா் (34), சந்துரு (23), ரமேஷ் (47), ஆனந்தவேல் (34), நம்பியாா் நகரைச் சோ்ந்த சிவராஜ் (45), வா்சன் (20), சுமன் (23), புதிய கல்லாா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (42) ஆகிய 11 போ் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நாகை மீன் பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா்.
இவா்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 41 கடல் மைல் தொலைவில் வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 11 மீனவா்களையும் கைது செய்து, விசைப்படகு மற்றும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனா்.
காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவா்கள் 11 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்ட்டனா். அவா்களை 15 நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.