ஃபாா்முலா 4 காா் பந்தயத்துக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
ஃபாா்முலா 4 காா் பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்றம், போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.7 கி.மீ. தொலைவுக்கு ஃபாா்முலா 4 காா் பந்தயம் நடத்த எதிா்ப்பு தெரிவித்து பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணையின்போது, ஏற்கெனவே உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு விதித்த நிபந்தனைகளின்படி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட மாட்டாது; பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. மேலும், எஃப்ஐஏ எனப்படும் சா்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு சான்று பெற்ற பிறகே, காா் பந்தயம் நடத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி (பொ) கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமா்வு, வியாழக்கிழமை ஓமந்தூராா் மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோரின் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஃபாா்முலா 4 காா் பந்தயத்தை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
பந்தயம் நடத்தப்படும் நாளில் பகல் 12 மணிக்குள் பந்தயம் நடத்துவதற்கான அனுமதிச் சான்றை எஃப்ஐஏ வழங்க வேண்டும் எனவும் அந்தச் சான்றின் நகலை மனுதாரா் தரப்புக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மீறினால் அதை நீதிமன்றம் தீவிரமாகக் கருதும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு 6 வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழக அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.