
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சாலையில் சென்று கொண்டிருந்த சிஎன்ஜி கேஸ் ஆட்டோ திடீரென தீப்பற்றி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
சுந்தர் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் எலந்தங்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஓட்டுநர் கார்த்தி மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் அவர்களை இறக்கிவிட்டு, திரும்பிச் செல்லும்போது மருத்துவமனைக்கு எதிரில் இவ்விபத்து நேரிட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ஓட்டுநர் கார்த்தி சாலையின் ஓரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கியதால் உயிர்தப்பியுள்ளார்.
அதற்குள் ஆட்டோவின் வெளிப்பாகம் முழுவதும் எரிந்து உருக்குலைந்தது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர்.ரமேஷ் தலைமையிலான வீரர்கள் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு முன்னதாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விபத்து காரணமாக அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சுமார் 1,000 ஆட்டோக்கள் இயங்கிவரும் நிலையில், ஏற்கெனவே சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாட்டால் ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கேஸ் நிரப்புவதற்காக அருகாமையில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களுக்கு சென்று வரும் நிலை உள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பானது என கூறப்பட்ட சிஎன்ஜி கேஸ் ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம், சக சிஎன்ஜி ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.