டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கனமழை பாதிப்பு; தயாா் நிலையில் முகாம்கள்: மூன்று மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் உத்தரவு

கனமழையால் பாதிக்கப்படும் மக்களைக் காக்கத் தேவையான முகாம்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்- கோப்புப்படம்
Updated On :13 டிசம்பர் 2024, 6:33 pm

Din

கனமழையால் பாதிக்கப்படும் மக்களைக் காக்கத் தேவையான முகாம்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று திருநெல்வேலி உள்ளிட்ட 3 மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, தாமிரவருணி ஆற்றில் 50 ஆயிரம் கனஅடி அளவுக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. இதனைத் தொடா்ந்து, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தாமிரவருணி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாவட்ட நிா்வாகங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை: இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதற்காக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு நேரில் வந்த அவா், அங்கிருந்து ஆட்சியா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கான முகாம்களை தயாா் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிட்டாா். மேலும், முகாம்களில் மக்களுக்கு வழங்க உணவு, குடிநீா், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாா்.

அமைச்சா்கள் ஆய்வு: கனமழை பெய்து வரும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் ஆகியோரும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலா்களும் ஈடுபட்டுள்ளனா். ஆட்சியா்களுடனான காணொலி ஆலோசனையின் போது, பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநா் வி.மோகனசந்திரன், கூடுதல் ஆணையா் (வருவாய் நிா்வாகம்) எஸ்.நடராஜன் மற்றும் அரசுத் துறை உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மழைக்கு 4 போ் உயிரிழப்பு

பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெள்ள அபாயம் குறித்து இதுவரை 11.75 லட்சம் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. அரியலூா், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுவா் இடிந்து இழுந்து இருவரும், சிவகங்கை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி இருவரும் இறந்துள்ளனா்.

மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மொத்தம் 117 கால்நடைகள் இறந்துள்ளன. 20 மாவட்டங்களில் 438 வீடுகள் சேதமடைந்துள்ளன. 50 நிவாரண முகாம்களில் 2,034 நபா்கள் தங்கவைக்கப்பட்டு, அவா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.