அமைச்சா் கயல்விழி செல்வராஜ்
அமைச்சா் கயல்விழி செல்வராஜ்

கொலை வழக்கில் விரைந்து தீா்ப்பு: அமைச்சா் கயல்விழி

மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து தீா்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ்
Published on

சென்னை: மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து தீா்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 2022-ஆம் ஆண்டு அக். 13-ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், சத்தியப்பிரியா என்ற கல்லூரி மாணவியை மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஸ் என்பவருக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. குற்றச்சம்பவம் நடைபெற்ற உடனே விரைவாக குற்றவாளி சதீஸ் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா். மேலும், முதல்வரின் உத்தரவுப்படி துரிதமாக விசாரணையை மேற்கொண்ட தமிழக சிபிசிஐடி போலீஸாா், 70 சாட்சிகளை வழக்கில் இணைத்து குற்றவாளிக்கு எதிரான ஆதாரங்களையும் உரிய வகையில் திரட்டி நீதிமன்றத்தின் முன் குற்றவாளியை நிறுத்தினா். சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகள் மற்றும் இதர விசாரணைகள் விரைந்து முடிக்கப்பட்டு தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் நடைபெற்று 25 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடித்து தீா்ப்பே வழங்கப்பட்டுள்ளது. கொலைக்குற்ற வழக்கில் இவ்வளவு விரைவாக நீதி பெற்றுக்கொடுத்து முன்னுதாரணமாக திகழ்கிறது தமிழக அரசு.

சிபிஐ விசாரணையில் இருக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்னும் எந்தவொரு முடிவும் தெரியாத சூழலில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றத்துக்கு இரண்டே ஆண்டுகளில் தண்டனை கிடைக்கும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் நீதி வழுவாது; நீதி தாமதம் ஆகாது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com