

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில். திருமால், பிரம்மன், சூரியன், பைரவர், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் பலவும் இங்குள்ள சிவபெருமானை வழிபட்ட வரலாற்று சிறப்புக்கு உரியது இத்திருக்கோயில்.
இக்கோயில் கும்பாபிஷேகம் இதற்கு முன்பு 13.6.1954 மற்றும் 10.6.2005 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தற்போது இக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக ரூ. 3 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் 33 யாகசாலைகள் அமைக்கப்பட்டு அதில் 160 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை செய்தனர்.
யாகசாலை பூஜைகள் ஆலய அர்ச்சகர் கே. வி. சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கின. மறுநாள் திங்கள்கிழமை கோ பூஜை, தனபூஜை ஆகியனவும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை ராஜகோபுரங்களுக்கும் மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கும் மங்கள மேள வாத்தியங்களுடன் எடுத்துச் சென்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நாதசுவர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றன. கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருக்கோவில் திருப்பணி குழுவின் தலைவர் எஸ். பெருமாள், செயலாளர் கே. சுப்பராயன், செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் எம். சிவகுரு ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
காஞ்சிபுரம் சரக டிஐஜி ஆர். பொன்னி, எஸ். பி. கே சண்முகம் ஆகியோர் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையும் படிக்க: இந்தியாவின் கடன் எவ்வளவு தெரியுமா?
இவ்விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, ஆட்சியர் கலைச்செல்வி மோகன், திரைப்பட இயக்குநர் செல்வமணி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.