39 எம்பிக்கள் இருக்கும் போதே மத்திய அரசிடம் கெஞ்சிகிறோம்: முதல்வர் ஸ்டாலின்

39 எம்பிக்கள் இருக்கும் போதே மத்திய அரசிடம் கெஞ்சிகிறோம்: முதல்வர் ஸ்டாலின்

39 எம்பிக்கள் இருக்கும் போதே மத்திய அரசிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ஒரே நாடு - ஒரே தேர்தல் தொடர்பாக கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானங்களை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பின்னடைவைச் சந்திக்கும்.

1971-ஆம் ஆண்டு தமிழ்நாடும் பிகாரும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான மக்கள்தொகையைக் கொண்டிருந்ததால் மக்களவையில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான தொகுதிகளைக் கொண்டிருந்தன.

இன்று தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் பிகாரின் மக்கள்தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டில் தற்போதுள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கை பல வடமாநிலங்களின் எண்ணிக்கையை விட விகிதாசாரத்தில் குறைந்து விடும்.

39 எம்பிக்கள் இருக்கும் போதே மத்திய அரசிடம் கெஞ்சிகிறோம்: முதல்வர் ஸ்டாலின்
ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம்!

இதனை நினைத்துப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் உரிமைக்காக இவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதியை குறைத்துவிட்டால் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள். 39 எம்.பி.கள் இருக்கும் போதே மத்திய அரசிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம். இதிலும் குறைந்தால் என்ன ஆகும்?

தமிழ்நாடு, கோரிக்கை வைக்கும் பலத்தை இழக்கும். அதன் சக்தியை இழக்கும். அதனால் அதன் உரிமைகளை இழக்கும். இதனால் தமிழ்நாடு பின்தங்கி விடும். எனவே தான் தொகுதி வரையறை - மறுசீரமைப்பு என்ற பெயரால் தொகுதிகளின் எண்ணிக்கையை எந்தச் சூழலிலும் குறைக்கக் கூடாது என்கிறோம்.

மக்கள்தொகைக் குறைந்து விட்டதைக் காரணம் காட்டி, தென் மாநிலங்களுக்குத் தொகுதிகளைக் குறைப்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை பலவீனம் அடையச் செய்யும். எனவே, அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளும் வரை, தொகுதிகளின் எண்ணிக்கையை இப்படியே தொடரச் செய்வதே சரியாகும்.

இதேபோன்ற பாரபட்சம்தான் நிதி ஒதுக்கீட்டிலும், நிதி பகிர்விலும் காட்டப்படுகிறது. மக்கள்தொகையைக் காரணமாகக் காட்டி தென்னிந்திய மாநிலங்களுக்கு வரி வருவாயில் பங்கு குறைந்துவிட்டது.

இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்த மாபெரும் நாடு! பல்வேறு மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி கூட்டரசு இது! இங்கு எந்த மாநிலமும் பிற மாநிலத்தைவிட உயர்ந்ததோ, முக்கியமானதோ அல்ல, அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும் என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com