ஊழியர்களின்றி முடங்கிக் கிடக்கும் கோழி ஆய்வகம்!

பணியாளர் பற்றாக்குறையால் நிலைகுலைந்த கோழி ஆய்வகம்
ஊழியர்களின்றி  முடங்கிக் கிடக்கும் கோழி ஆய்வகம்!

திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 9.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட அதிநவீன கோழி நோய் ஆய்வு மையம், பணியாளர்கள் நியமிக்கப்படாததால் செயல்பாட்டுக்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் கறிக்கோழி, நாட்டுக்கோழி வளர்ப்பு முக்கியமான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கறிக்கோழி உற்பத்தி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகள்: திருப்பூர், பல்லடம், காங்கயம், குண்டடம், தாராபுரம் பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. மேலும், கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பிலும் அதிக அளவிலானோர் ஈடுபட்டுள்ளனர்.

நோய்த் தாக்குதல், காய்ச்சல் காரணமாக ஒரு கோழி பாதிக்கப்பட்டாலும் பண்ணையில் உள்ள அனைத்துக் கோழிகளும் இறப்பது அவ்வப்போது நேரிட்டு வருகிறது. இதனால், உற்பத்தியாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல்லடம் வட்டத்தை மையமாகக் கொண்டு கோழி நோய் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்று கறிக்கோழி உற்பத்தியாளர்களும், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ரூ.9.20 கோடியில் அதிநவீன கோழி நோய் ஆய்வு மையம்: அதன்படி, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பல்லடத்தை அடுத்த சின்னியகவுண்டன்பாளையத்தில் 4.3 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன கோழி ஆய்வு மையம் கட்ட ரூ.9.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

இதையடுத்து கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆய்வு மையம் திறக்கப்பட்டது. இங்கு, கோழிகளுக்கான நோய்களைக் கண்டறிதல், தீவனம், நீர் பகுப்பாய்வு மையம் ஆகியவற்றுக்கான நவீன இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஆய்வு மையம் திறக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் கால்நடை மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், லேப் டெக்னீஷியன்கள், உதவியாளர்கள், மாதிரி சேகரிப்பாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்படாததால் ஆய்வு மையம் செயல்பாட்டுக்கு வராமல் முடங்கிக்கிடக்கிறது.

செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்: இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் ஏபிடி மகாலிங்கம் கூறியதாவது: கறிக்கோழி உற்பத்தியாளர்கள், விவசாயிகளின் கோரிக்கையையடுத்து பல்லடத்தில் அதிநவீன கோழி ஆய்வு மையம் திறக்கப்பட்டது. ஆனால், உரிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால் ஆய்வு மையம் இன்றுவரை செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.

இந்த ஆய்வு மையம் செயல்படுவதற்கு கால்நடை மருத்துவர்கள், லேப் டெக்னீஷியன்கள், மாதிரி சேகரிப்பாளர்கள், எலெக்ட்ரீஷியன், வாகன ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஆனால், மாற்றுப் பணியிடமாக 1கால்நடை மருத்துவர், ஈரோடு, கோவையில் இருந்து தலா ஒரு லேப் டெக்னீஷியன் என வாரத்துக்கு இரண்டுமுறை வந்து செல்கின்றனர்.

இதனால், எந்தவிதப் பயனும் இல்லை. முழுமையாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு மையம் செயல்படத் தொடங்கினால் மட் டுமே கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்குப் பலன்கிடைக்கும்.

தற்போதைய நிலையில் கோழிகளுக்கு எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் நாமக்கல் மாவட்டத்துக்கே கொண்டுசெல்லவேண்டியுள்ளது.

இதனால், கூடுதல் செலவு, கால விரயம் போன்ற இழப்புகளை உற்பத்தியாளர்கள் சந்திக்கின்றனர்.

எனவே, கறிக்கோழி உற்பத்தியாளர்களின் நலனைக் கருதி, உரிய பணியாளர்களை நியமித்து கோழி ஆய்வு மையத்தைச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அரசுக்கு கோரிக்கை: இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கோழி நோய் ஆய்வுக்காக மிகவும் அதிநவீன முறையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட, கரோனா நோய்த் தொற்று வரை கண்டறியும் வசதிகளுடன் "பிஎஸ் லெவல் 2' தரத்தில் இந்த ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மையத்துக்கு குறைந்தது 6 கால்நடை மருத்துவர்கள், ஒவ்வொரு மருத்துவருக்கும் தலா 2 உதவியாளர்கள், ஒரு பராமரிப்பு உதவியாளர், 4 லேப் டெக்னீஷியன்கள், அவர்களுக்கு உதவியாளர்கள், மாதிரி சேகரிப்பாளர்கள், அலுவலக ஊழியர்கள், வாகன ஓட்டுநர்கள் என குறைந்தது 30 பேர் பணியமர்த்தினால் மட்டுமே ஆய்வு மையத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியும்.

இந்த ஆய்வகத்தைச் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை செலவழித்தாலும், கட்டண முறையில் ஆய்வு மையம் செயல்படவுள்ளதால், அரசு செலவு செய்யும் தொகையைவிடக் கூடுதலாக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வகத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com