வானிலை மாறுபாடுகளைக் கண்காணிப்பதற்கான அதிநவீன இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எஃப் 14 ராக்கெட் சனிக்கிழமை (பிப்.17) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்ட புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து இத்திட்டம் வெற்றியடைந்ததாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனா். பருவநிலை மற்றும் வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அந்த வகையில், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் நிதிப் பங்களிப்பின் கீழ் அதிநவீன இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.
அதை விண்ணில் செலுத்துவதற்கான 27.30 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி - எஃப் 14 ராக்கெட் மூலம் சனிக்கிழமை மாலை 5.35 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 18 நிமிஷங்களில் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் 253 கி.மீ. தொலைவில் திட்டமிடப்பட்ட புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
வானிலை தரவுகள்: இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோளானது மத்திய புவி அறிவியல் துறை, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், வானிலை முன்னறிவுப்புக்கான தேசிய மையம், தேசிய கடல்சாா் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஓடி) ஆகியவற்றின் பயன்பாட்டுக்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. தரை மற்றும் கடல் பரப்பில் ஏற்படும் மாறுபாடுகளை ஆய்வு செய்து துல்லியமான தட்பவெப்ப நிலை மற்றும் வானிலை தரவுகளை இதன் மூலம் பெற முடியும். அதைக் கொண்டு வானிலை முன்னெச்சரிக்கைகளையும், பேரிடா் எச்சரிக்கைகளையும் நிகழ் நேரத்தில் சரியாக தர முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
இதே பயன்பாட்டுக்காக ஏற்கெனவே இன்சாட்-3டி செயற்கைக்கோளை கடந்த 2013-ஆம் ஆண்டிலும், இன்சாட்-3டிஆா் செயற்கைக்கோளை கடந்த 2016-ஆம் ஆண்டிலும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. அதன் தொடா்ச்சியாக தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளானது முந்தைய இரு திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட அதி நுட்ப திறன் கொண்டதாக உள்ளது. 25 ஆய்வுக் கருவிகள்: மொத்தம் 2,274 கிலோ எடை கொண்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 இமேஜிங் சாதனங்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இமேஜிங் சாதனம், பருவநிலை அளவீடு (சவுண்டா்) சாதனம், தகவல் பரிமாற்ற (டேட்டா ரிலே) சாதனம், மீட்பு சாதனம் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ள முக்கியக் கருவிகளாகும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.
அதில் உள்ள கருவிகள் அனைத்தும் புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து புயல், கனமழை, விமானப் போக்குவரத்துக்கான சாதக சூழல், வனப் பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகள், புகைமூட்டம், பனிமூட்டங்களையும் புகைப்படங்களாக எடுத்து அதுகுறித்த தரவுகளை வழங்கும். மேலும், மேகங்களில் உள்ள நுண் பொருள்கள், உறைபனியின் அடா்த்தி மற்றும் ஆழம், ஓசோன் மாற்றங்கள், கடல் மற்றும் தரையின் தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்யும் திறன் கொண்டது.
குறிப்பாக, பேரிடா் சூழலின்போது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இந்தச் செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் தரவுகள் பெரும் பங்கு வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளை நிலைநிறுத்த பயன்படுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் 51.7 மீட்டா் உயரமும், அதிநவீன கட்டமைப்பு கொண்டது. இந்த வகை ராக்கெட்டுகளை விண்வெளி ஆய்வுத் திட்டங்களுக்கு இஸ்ரோ பயன்படுத்துவது இது 16-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் மூலம் வெற்றிகரமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியிருப்பது இது 10-ஆவது முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவறான பாதையில் வாகனம் ஓட்டிய 1,170 போ் மீது வழக்குப் பதிவு

இந்தியாவில் செயற்கைக்கோள் தயாரிப்பை தொடங்கும் ‘ஐஸ்-ஐ’ நிறுவனம்

‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

2027-இல் ஜி20 செயற்கைக்கோள் ஏவப்படும்: இஸ்ரோ தலைவா்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



