
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:
"இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருவதாகத் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19 விழுக்காடாக இருக்கிறது.
மாநிலத்தின் பணவீக்கமானது 5.97 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்து 3-ஆவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம். புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
இப்படி அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உயர்த்தி வருகிறது.
இந்த வளர்ச்சியின் அடுத்தகட்ட உயர்வை அடையாளம் காட்டுவதாக தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அமைந்திருப்பதை உணர்ந்து மகிழ்கிறேன். இலக்கை அமைத்துக் கொள்வதுதான் வெற்றிக்கான முதல் படி. இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டின் பெருங்கனவுகளை மாபெரும் இலக்காகக் கொண்டுள்ளது.
சமூகநீதி - கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு - உலகை வெல்லும் இளைய தமிழகம் - அறிவுசார் பொருளாதாரம் - சமத்துவ நோக்கில் மகளிர் நலம் - பசுமைவழிப் பயணம் - தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
குடிசை இல்லாத் தமிழ்நாடு - வறுமை ஒழிப்பு - பின்தங்கிய பகுதிகளின் மேம்பாடு - விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் - மாணவர்களுக்கு கல்விக் கடன் - காலை உணவுத் திட்ட விரிவாக்கம் - நீர்நிலைப் பாதுகாப்பு - கணினிமயமாக்கம் - சாலைகள் - குடிநீர்வசதிகள் - தமிழ் வளர்ச்சி - தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்பு - தொல்லியல் - விண்வெளி என அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது அமைந்துள்ளது.
தலைசிறந்த - தொலைநோக்குப் பார்வை கொண்ட - கனிவான - பொருளாதாரச் சமநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டுகிறேன்.
திராவிட மாடல் அரசுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும் மாபெரும் கடமையை மிகச் சரியாக ஆற்றி இருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அவருக்குத் துணையாக இருந்து, பொருளாதார வளத்தைச் சமூகச் சீர்திருத்த வளர்ச்சிக்குப் பயன்படும் வகையிலான அறிக்கையாக அமையக் காரணமாகவும் இருந்த நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரனுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிதித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.