
கரூர் அருகே கொலை குற்றம்சாட்டப்பட்டவர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது மர்ம கும்பல் வெட்டியதில் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான மதுரை மேல அனுப்பாணடியைச் சேர்ந்த ராமர் என்கிற ராமகிருஷ்ணன் ( 36) மற்றும் மற்றொரு குற்றவாளி அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (39) ஆகிய இருவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த வழக்கில் கொலை தொடர்பாக ஆஜராகி விட்டு வந்திருந்த போது அங்கு பாதுகாப்பு இல்லாததால் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக இருவரும் மதுரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் கரூர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். பின்னர் இருவரும் கருர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மதுரைக்கு அரவக்குறிச்சி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேரப்பட்டி பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த மர்மகும்பல் திடீரென இருவரையும் வழிமறித்து வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த ராமர் என்கிற ராமகிருஷ்ணன் சம்பவத்தில் பலியானார்.
கார்த்திக் படுகாயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தினர். மேலும் இதுதொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் கொலை குற்றவாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.