
திருச்சி: உயர்கல்விப் பூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடி சரியாக 10.37 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றார். உள்ளே நுழைந்ததும் அங்குள்ள பாரதிதாசன் உருவச்சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செய்தார். அதைத்தொடர்ந்து பட்டம்பெறுவோரில் தங்கப்பதக்கம் பெற்ற சுமார் 100 மாணவ, மாணவிகள் ஒரு அரங்கத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் முன் வரிசையில் பிரதமர் மோடி அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பிரதமருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர். என். ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன், ஆகியோரும் படத்தில் உடன் இருந்தனர். பின்னர் மாணவர்கள் அருகே சென்று பேசினார்.
இதையும் படிக்க.. சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் விற்பனை!
அதே அரங்கின் இன்னொரு புறம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பட்டமளிப்பு விழா உடையுடன் இருந்தனர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் பட்டமளிப்பு விழா உடையணிந்து 10.45 மணிக்கு பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா அரங்கம் வந்தார்.
அதைத்தொடர்ந்து தேசியகீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் எம். செல்வம் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். அதைத்தொடர்ந்து விழா தொடங்கியது.
விழாவில், பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறி உரையைத் தொடங்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது, இன்னார்தான் படிக்க வேண்டும் என்பதை மாற்றி அனைவரும் படிக்க வேண்டும் என்பதை மாற்றிய அரசு திமுக அரசு என்று கூறினார்.
கல்வியில் சிறந்த என்று எந்தப் பட்டியலை எடுத்தாலும், அதில் தமிழகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள்தான் அதிகம் இடம்பெற்றிருக்கும். நூறாண்டுகளுக்கு முன்பு நீதிக் கட்சி ஆட்சியின்போது போடப்பட்ட விதைதான் இன்று வளர்ச்சி கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம்.
தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், 2023 நிலவரப்படி தமிழ்நாட்டில் 328 கல்லூரிகள் சிறந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. உயர்கல்வியின் பூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம். நீங்கள் தேர்வு செய்த துறையில் சிறந்து விளங்குங்கள், நாட்டுக்கும், பெற்றோருக்கும் சேவை வழங்குங்கள். பட்டம் வழங்கிய பல்கலைகழகங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமைதேடித் தாருங்கள். தந்தையாக இருந்து உங்களுக்கு இதை நான் சொல்கிறேன் என்றார் அவர்.
பெண் கல்வியை ஊக்குவிக்கும்பொருட்டும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு மாணவர்கள் போட்டித் தேர்வுகள், ஆட்சிப்பணித் தேர்வுகள் போன்றவற்றுக்கு தயார் செய்யும் வகையில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்அமைக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டம் மூலம் 2 ஆண்டுகளில் 29 லட்சம்ட மாணவர்களுக்கு 32 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
பிறகு, பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலையில் தங்கப் பதக்கம் பெற்ற 33 பேருக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார். அருகில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஆகியோர் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.