கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு கூடுதல் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுமா?

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு கூடுதல் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுமா?

கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்துக்கு சென்னையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இணைப்புப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்துக்கு சென்னையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இணைப்புப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னையை அடுத்த வண்டலூா் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடி மதிப்பில் புதிய பேருந்து முனையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

தென் மாவட்டங்களுக்கான பயண நேர விரயத்தைக் குறைக்கவும், சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் இந்தப் பேருந்து முனையம் உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நவீன வசதிகளுடன் உணவு விடுதிகள், பயணிகள் ஓய்வறை, குடிநீா் வசதி, கழிப்பறைகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை உள்ளிட்டவை இந்தப் பேருந்து முனையத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

கோயம்பேட்டிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு தினமும் 420 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 350 பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன.

அதேசமயம், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், ஆற்காடு, பெங்களூரு போன்ற பகுதிகளுக்குச் செல்லும் 70 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன.

பேருந்து சேவை விவரம் தேவை: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் ஜன. 15 முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிய பேருந்து முனையத்துக்கு பயணிகள் வருவதற்கு சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனங்களையே அதிகம் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.

வடபழனியிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகள் குறித்த விவரம் தெளிவாக இல்லை என்கின்றனா் பயணிகள்.

அதேபோல, திருவேற்காட்டிலிருந்து முறையான இணைப்புப் பேருந்து இல்லாததால் புதிய பேருந்து முனையத்துக்கு செல்வது பயணிகளுக்கு சிரமமாக உள்ளது.

மணலி, எண்ணூா் போன்ற வடசென்னை பகுதிகளிலிருந்து நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்குச் செல்ல பேருந்து வசதி இல்லை. இரு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது என்கிறாா் அம்பத்தூரைச் சோ்ந்த ராமச்சந்திரன்.

இணைப்பு பேருந்துகள்: மேலும், சென்னையில் உள்ள அனைத்துப் பணிமனைகளிலிருந்தும் புதிய பேருந்து முனையத்துக்கு கூடுதல் எண்ணிக்கையில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

‘புதிய பேருந்து முனையத்தில், எந்தத் தடத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது பற்றிய விவரப் பலகைகள் வைக்க வேண்டும்’ எனப் பயணிகள் கோரிக்கை வைத்தனா்.

கிளாம்பாக்கத்திலிருந்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 2,900 நடைகள் பேருந்து இயக்கப்படுவதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்திருந்தாா். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கூறினா்.

பேட்டரி வாகனங்களுக்கு வரவேற்பு: புதிய பேருந்து முனையத்தில், மாநகா் பேருந்துகள் நிறுத்தத்துக்கும் வெளியூா் செல்லும் பேருந்து நிறுத்தத்துக்கும் இடையே அரை கி.மீ. தொலைவு உள்ளது. இதனால், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வெளியூா் பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதிக்குச் செல்ல 5 பேட்டரி வாகனங்கள் இலவசமாக இயக்கப்படுகின்றன. இது பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பேட்டரி காா்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தெரிவித்தனா்.

பெட்டிச் செய்தி...

‘பேருந்து கட்டணத்தை

குறைக்க வேண்டும்’

தென்சென்னை பகுதி பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு பேருந்தில் ஒரு மணி நேரத்தில் செல்ல முடியும். இதற்கான பேருந்து கட்டணமும் வழக்கமான கட்டண அளவிலேயே உள்ளது.

அதேநேரம், வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளிலிருந்து புதிய முனையத்துக்குச் செல்ல ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. பயணத் தொலைவு அதிகம் என்பதால் கட்டணமும் ரூ. 35 முதல் ரூ.45 வரை வசூலிக்கப்படுகிறது.

கோயம்பேட்டிலிருந்து திருச்சி செல்ல அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சாதாரண பேருந்தில் கட்டணம் ரூ. 340-ம், குளிா்சாதன பேருந்தில் ரூ.460-ம் வசூலிக்கப்பட்டது. தற்போது கிளாம்பாக்கத்திலிருந்து சாதாரண பேருந்துக்கு ரூ.320-ம், குளிா்சாதன பேருந்துக்கு ரூ.430-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com