
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை நகரில் 4 நாள்கள் நடைபெறும் சென்னை சங்கமம் திருவிழாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற தொடக்க விழாவில், மக்களவை உறுப்பினா் கனிமொழி, தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இன்று முதல் நிகழ்ச்சிகள்: சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) முதல் நடைபெறவுள்ளன. தினமும் மாலை 6 முதல் 9 மணி வரை மயிலாப்பூா் நாகேஸ்வர ராவ் பூங்கா, திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியா் அரங்கம், பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை, தியாகராய நகா் மாநகராட்சி பூங்கா, (நடேசன் பூங்கா எதிரில்), சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், செம்மொழிப்பூங்கா, கோயம்பேடு ஜெய் நகா் பூங்கா, அண்ணா நகா் கோபுர பூங்கா, கே.கே.நகா் சிவன்பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி மைதானம், தீவுத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூா் முரசொலி மாறன் பூங்கா, கொளத்தூா் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூா், எழும்பூா் அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
என்னென்ன நிகழ்ச்சிகள்? தமிழ் மண்ணின் பாரம்பரியத்தையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் 40 வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கரகாட்டம், ஆதிமேளம், காவடியாட்டம், புரவியாட்டம், வில்லிசை, தொல்கருவியிசை, கோல்கால் ஆட்டம், கைச்சிலம்பாட்டம், கரகம், தப்பாட்டம், கும்மியாட்டம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.