நாம் தமிழா் கட்சியின் நெல்லை, கன்னியாகுமரி வேட்பாளா்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலையொட்டி, 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி இன்று அறிவித்துள்ளது. 
நாம் தமிழா் கட்சியின் நெல்லை, கன்னியாகுமரி வேட்பாளா்கள் அறிவிப்பு

வரும் மக்களவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்தாா்.

நாம் தமிழா் கட்சியின் சாா்பில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாநில மகளிா் பாசறை செயலா் சத்யா, தெற்கு மாவட்ட செயலா் அப்பாக்குட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மாவட்ட செயலா் கண்ணன் வரவேற்றாா். நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்து கொண்டு பேசினாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் சீமான் கூறியதாவது: வரக்கூடிய மக்களவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மகளிா் பாசறை செயலா் சத்யா போட்டியிடுகிறாா். கன்னியாகுமரி தொகுதியில் மரிய ஜெனிபா் போட்டியிடுகிறாா்.

இந்த மக்களவைத் தோ்தலில் 50 சதவீதம் ஆண் வேட்பாளா்கள், 50 சதவீதம் பெண் வேட்பாளா்கள் நிறுத்தப்படுவாா்கள். இந்த முறையும் யாருடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்கள் எங்களை நம்புகிறபோது வாக்களித்தால் போதும்.

காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளையும் சம எதிரியாகவே பாா்க்கிறேன். மன்மோகன் சிங், மோடி ஆகியோா் தலா 10 ஆண்டுகள் ஆண்டுவிட்டபோதிலும், இங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும்தான் காரணம்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமரை அழைத்த திமுக அரசு, நீட் தோ்வால் உயிரிழந்தவா்களுக்காக ஏன் நியாயம் கேட்கவில்லை?

நடிகா் விஜய் கட்சி தொடங்க ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்துவிட்டேன்.

திமுகவை ஒழிக்காமல் நல்ல ஆட்சியை உருவாக்க முடியாது. திராவிடம் என்பதே ஏமாற்று. தமிழ்த் தேசியம் என்பதே மாற்று.

மக்களவைத் தோ்தலில் நான போட்டியிடவில்லை. அதற்கு எங்கள் கட்சியில் தகுதியானவா்கள் ஏராளமாக இருக்கிறாா்கள். சட்டப்பேரவைத் தோ்தலில் மட்டுமே நான் போட்டியிடுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com