நகைக்காக நடந்த கொலையில் திடீர் திருப்பம்: கணவரைக் காட்டிக்கொடுத்தது எது?

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நடந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கணவரே ஆள் வைத்துக் கொலை செய்தது அம்பலமாகியிருக்கிறது.
நகைக்காக நடந்த கொலையில் திடீர் திருப்பம்: கணவரைக் காட்டிக்கொடுத்தது எது?


சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கணவரே ஆள் வைத்துக் கொலை செய்தது அம்பலமாகியிருக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நங்கவள்ளி சாணாரபட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (58). குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர். இவரது மனைவி இந்திராணி (55). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த இரண்டு நாள்களுக்கு  முன்பு இந்திராணி மர்மமான முறையில் ஹாலோ பிரிக்ஸ் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்பது சவரன் தங்க தாலிக்கொடி திருடப்பட்டிருந்தது.

சேலம் மாவட்ட காவல் கண்காளிப்பாளர் அருண்கபிலன் துணை கண்காளிப்பாளர் சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து விசாரணை செய்தனர். மேலும் ஜலகண்டபுரம் காவல் ஆய்வாளர் சசிகலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

தொடக்கத்தில் நகைக்காக குப்பம்பட்டி  அண்ணா நகரை சேர்ந்த பாலு என்கிற பாலமுருகன் (28)என்பவர் அடித்து கொலை செய்துவிட்டு நகையை திருடிச் சென்று நகைக்கடையில் அடகு வைத்து பணம் பெற்றதாக கூறப்பட்டது.

காவல் துறைனர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போது ஈஸ்வரனுக்கும் அவரது மனைவி இந்திராணிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும் ஈஸ்வரனுக்கு  பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டிற்கு தாமதமாக வரும் போதெல்லாம் இந்திராணி ஏன் தாமதம் எங்கு சென்று வருகிறீர்கள் என கணவரிடம் கேட்டு தகறாரு செய்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் அவரது தோட்டத்தில் வேலை  பார்த்த பாலமுருகனுடன் மது அருந்தும் பொழுது இந்திராணியை தீர்த்த கட்டினால் தான் என்னால் நிம்மதி வாழ முடியும் என்றும் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனால் இருவரும் திட்டம் தீட்டி இந்திராணியை கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல நாடகமாடி உள்ளனர்.

தனது மனைவி கொலை செய்யப்பட்ட மறுநாள் ஈஸ்வரன் பத்திரிக்கையாளர்களிடம், யாரோ தனது மனைவியை நகைக்காக கொலை செய்துவிட்டதாக பேட்டி அளித்துள்ளார்.

விசாரணையில், காவல்துறையினருக்கு ஈஸ்வரன் மீது சந்தேகம் வர, காவல்துறையின் கிடுக்கிப் பிடி விசாரணையில் ஈஸ்வரனும் பாலமுருகனும் சிக்கிக் கொண்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் மேட்டூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மனைவியை ஆள் வைத்துக் கொலை செய்த கணவன், எதுவும் தெரியாதது போல நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com