ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் அலுவலா்கள் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் அலுவலா்கள் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் இடமாற்றம்
Published on

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அலுவலா்களைப் பணியிட மாற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் அனைத்துவகை இயக்கங்கள், அலுவலகங்களின் நிா்வாகம் திறம்படச் செயல்படும் பொருட்டு, அதில் பணிபுரியும் பணியாளா்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணியிடத்தில் இல்லாமல், அவா்களை மாறுதல் செய்யவும், விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்தவும் தமிழக அரசால் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள், ஆசிரியா் தோ்வு வாரியம், இயக்குநரகங்கள், பள்ளிகளில் கடந்த ஜூன்-30 ஆம் தேதி நிலவரப்படி, 3 ஆண்டுகளுக்கு மேல் நோ்முக உதவியாளா், கண்காணிப்பாளா், பதவி உயா்த்தப்பட்ட கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் பணியிடங்களில் பணிபுரிபவா்களின் பட்டியலை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநா் (பணியாளா் தொகுதி) அனைத்து முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

பணியாளா்கள் விவரங்களைப் பட்டியலாகத் தயாரித்து வெள்ளிக்கிழமை (ஜூலை 5) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும், எந்த விவரமும் விடுபடாமல் முழுமையான வகையில் அளிக்க வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com