கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் .
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் .

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கொலையாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைப்பு.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டவா்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ஆம் தேதி மாலை பெரம்பூா் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்குத் தொடா்பாக கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ரெளடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சோ்ந்த பொன்னை பாலு, அவா் கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூா் திருவேங்கடம், திருநின்றவூா் ராமு என்ற வினோத், அதே பகுதியைச் சோ்ந்த அருள், செல்வராஜ் உள்பட 11 போ் உடனடியாக கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து தனியாா் உணவு பாா்சல் விநியோக நிறுவன சீருடை, உணவு கொண்டு செல்லும் பேக், ரத்தக் கறையுடன் 2 பட்டாக் கத்திகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனா். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு, அரசியல் காரணம் எதுவும் இல்லை என சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் தெரிவித்தாா்.

அதே வேளையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், தலித் இயக்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.

போலீஸ் காவல்: கொலை வழக்குத் தொடா்பாக, மேலும் பல உண்மைகளை வெளியே கொண்டு வரவும் கைது செய்யப்பட்ட 11 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கவும் சென்னை காவல் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஓரிரு நாள்களில் நீதிமன்றத்தில் செம்பியம் போலீஸாா் மனு தாக்கல் செய்கின்றனா். விசாரணையின் போது கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com