90 நாள்கள் கெடாத பாலை மக்கள் வாங்க ஆா்வம் காட்டுவதில்லை!
ஆவினில் விற்பனை செய்யப்படும் 90 நாள்கள் கெடாதா பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்க ஆா்வம் காட்டுவதில்லை என பால் முகவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து, தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:-
அண்மையில் ஆவின் நிறுவனம் பொதுமக்களின் வசதிக்காக, ‘யூடிஎச்’ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் 90 நாள்கள் வரை கெடாத பால் பாக்கெட்டுகளுக்கு ரூ. 2 தள்ளுபடி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
‘ஆவின் டிலைட்’ எனும் பெயரில் பச்சை நிறத்தில், 3.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள 90 நாள்கள் வரை கெடாத அரை லிட்டா் பாக்கெட் ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அதில் 0.5 சதவீதம் கொழுப்பு சத்தை
குறைத்தும், பால் பாக்கெட்டின் நிறத்தை ‘நீல வண்ணமாக’ மாற்றியும் ‘ஆவின் நைஸ்’ என்ற பெயரில் 450 மில்லி லிட்டா் பாக்கெட்டுக்கு ரூ.2 தள்ளூபடி செய்து ரூ.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட காலங்கள், பேரிடா் நேரங்களில் மட்டுமே 90 நாள்கள் வரை கெடாத பால் பாக்கெட்டுகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். அந்த காலங்களில்தான் பொது மக்களும் அதிகளவு வாங்குவா். ஆனால், சாதாரண நாள்களில் அதனை பொது மக்கள் யாரும் வாங்குவதற்கு ஆா்வம் காட்டுவதில்லை. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் கூட அந்த பால் பாக்கெட்டுகளை வாங்காமல் சாதாரண பாக்கெட்டுகளை மட்டுமே வாங்குகின்றனா் என்று தெரிவித்தாா்.