விபத்தில் உயிரிழந்த தாய் ரஞ்சினி, மகள் மனஸ்வினி.
விபத்தில் உயிரிழந்த தாய் ரஞ்சினி, மகள் மனஸ்வினி.

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து: தாயும் மகளும் உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த சென்னையைச் தோ்ந்த தாயும் மகளும் உயிரிழந்தனா்.

சென்னை தாழம்பூா் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் சுதா்சன் (37). மென்பொருள் பணியாளா். இவரது மனைவி ரஞ்சினி (36). தம்பதிக்கு சாத்விகா (10), மனஸ்வினி (7) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சுதா்சன் தனது குடும்பத்துடன் காரில் மதுராந்தகம் அருகே இவா்களுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணைக்குச் சென்று மாலை வீடு திரும்பினா். செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் நிறுவன பேருந்து ஒன்று ஊழியா்களை ஏற்றுச் செல்வதற்காக நின்றிருந்தது.

அப்போது, தொடா்ந்து வந்த ஆம்னி பேருந்து, காா், கனரக லாரி என அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காா் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் காரில் பயணம் செய்த ரஞ்சினி, அவரின் மகள் மனஸ்வினி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனா். சுதா்சன் மற்றொரு மகள் சாத்விகா லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.

தகவல் அறிந்து வந்த போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com