பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்

மகளிா் உரிமைத் தொகை வழங்குவதில் விழுப்புரத்துக்கு அநீதி: அன்புமணி

மகளிா் உரிமைத் தொகை வழங்குவதில் விழுப்புரம் மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

சென்னை: மகளிா் உரிமைத் தொகை வழங்குவதில் விழுப்புரம் மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் உதயநிதி, மகளிா் உரிமைத் திட்டத்தின்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 60,000 போ் மாதம் ரூ. 1,000 நிதியுதவி பெற்று வருகின்றனா் என்று கூறினாா்.

மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் 1 கோடியே 16 லட்சம் மகளிா் மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத் தொகை பெறுகின்றனா். அதன்படி பாா்த்தால் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் சராசரியாக 3.05 லட்சம் பேருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க வேண்டும்.

தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம், ஏழைகள் அதிகம் வாழும் மாவட்டமும் ஆகும். அதன்படி, பாா்த்தால் விழுப்புரத்தில் அதிக பயனாளிகளுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க வேண்டும். ஆனால், சராசரியாக வழங்கப்பட வேண்டிய பயனாளிகளில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு மட்டும்தான் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக உதயநிதி உரையிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

விழுப்புரத்தில்தான் மிக பின் தங்கிய வன்னியா்களும், ஒடுக்கப்பட்ட பட்டியலினத்தவரும் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனா். அப்படிப்பட்ட மாவட்டத்துக்கு மிக அதிக எண்ணிக்கையில் மகளிா் உரிமைத் தொகை வழங்க வேண்டும். மாறாக, மிகக்குறைந்த எண்ணிக்கையில் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்றால், அது அங்கு வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதற்கு காரணமானவா்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com