கல்வராயன் மலை கிராமங்களின் நிலை: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
கல்வராயன் மலை மக்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள், சலுகைகள் சென்றடைந்துள்ளனவா என்பது குறித்து ஜூலை 24-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கே.ஆர்.தமிழ்மணி அளித்த பேட்டியைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "இந்த வழக்கு கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக பொருளாதாரம் சார்ந்தது. இந்தப் பகுதி மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறினர்.
தற்போதைய நிலை என்ன? அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்குரைஞர் தமிழ்மணி, "கல்வராயன் மலை கிராம மக்கள் கர்ப்பிணிகளை 40 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு தோளில் தூக்கிச் செல்கின்றனர்' என்று கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞர் தமிழ்மணியை உயர்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், "கல்வராயன் மலை கிராமங்களின் தற்போதைய நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பகுதி மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ. 250 கோடி முறையாக செலவுச் செய்யப்பட்டதா என்பதுகூட தெரியவில்லை' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
ஆர்வமுள்ளோர் உதவலாம்: பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கல்வராயன் மலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று ஏராளமான ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு என்ன திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இது தொடர்பான விரிவான அறிக்கையை ஜூலை 24-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், கல்வராயன் மலை கிராமங்கள் குறித்து ஆய்வு செய்தவர்கள், அந்தப் பகுதியைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள், இந்த விவகாரத்தில் ஆர்வம் உள்ள பொதுமக்கள், குறிப்பாக பத்திரிகையாளர்கள் உயர்நீதிமன்றத்துக்கு உதவும் விதமாக தங்களிடம் உள்ள விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யலாம்.
அப்போதுதான், இந்தப் பகுதி மக்களுக்கு விரைவான நலத்திட்டங்களைச் செய்துகொடுக்க உத்தரவிட முடியும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...