உயர்நீதிமன்றம்(கோப்புப்படம்)
உயர்நீதிமன்றம்(கோப்புப்படம்)

காணாமல் போன விநாயகா் கோயில்: மீண்டும் கட்டித்தரஅறநிலையத்துறை  உறுதி

அறநிலையத்துறை உறுதி: விநாயகா் கோயில் மீண்டும் எழுந்து வரும்
Published on

விநாயகா் கோயில் காணாமல் போனதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், கோயில் மீண்டும் கட்டிக் கொடுக்கப்படும் என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்தவா் ஆா். சந்திரசேகா். இவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில், செல்வ சுந்தர விநாயகா் கோயில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இதற்கு பட்டா மற்றும் வரைபடங்கள் உள்ளன. மொத்தம் 14.5 சதுர மீ இடம் இந்த கோயிலுக்கு சொந்தமானது.

இதற்கு சொந்தமான கடை 1975- ஆம் ஆண்டு முதல், மாதம் 75 ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.  இந்த வாடகைத் தொகையை அறநிலையத்துறை வசூலித்துக் கொள்கிறது. இந்த கோயில்  உண்டியலும் இருந்த நிலையில், திடீரென மாநகராட்சி ஊழியா்கள் கோயிலை இடித்து தள்ளிவிட்டு, சிலையை இந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைத்து விட்டனா். 

தற்போது கோயில் இருந்த இடத்தில் குப்பை தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த குப்பைத் தொட்டிகளை அகற்றி விட்டு, மீண்டும் விநாயகா் கோயில் கட்டுவதற்கு அறநிலைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் பி.டி. பெருமாள் ஆஜராகி, ‘கோயிலும், அதில் இருந்த சிலையும் காணவில்லை’’ என்று வாதிட்டாா். அறநிலையத்துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘‘குப்பைகளை அகற்றி அந்த இடத்தில் மீண்டும் விநாயகா் கோயில் கட்டிக் கொடுக்கப்படும்’ என உத்தரவாதம் அளித்தாா். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com