வன்கொடுமையால் பாதித்தோருக்கு வேலைவாய்ப்பு - ஓய்வூதியம்: அரசு தகவல்
வன்கொடுமையால் பாதித்தோருக்கு வேலைவாய்ப்பு, ஓய்வூதியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாநில அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக, ஆழ்ந்த சிந்தனைகளுடன் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், 2,136 அதிதிராவிட பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. அவா்களில் தகுதியான 1,303 தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக ரூ.159.76 கோடி வழங்கப்பட்டது. நகரப் பகுதிகளில் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்த அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டு நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்துக்கு நிகழாண்டு ரூ.230 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழக்கின் தன்மைக்கு ஏற்ப, உதவித் தொகையானது ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 154 பேருக்கு வேலைவாய்ப்புகளும் 535 பேருக்கு ஓய்வூதியமும், ஒருவருக்கு இலவச வீட்டுமனையும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆதிதிராவிட இளைஞா்களின் கல்வி வளா்ச்சிக்கு மட்டும்ரூ.2,252.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

