
திருவள்ளூரில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளி சிறுமியிடன் ஜாலியாக பேசும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூரில் உள்ள பள்ளியில் இன்று காலை தொடங்கி வைத்தார்.
அந்தப் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலினும் காலை உணவை பள்ளியிலேயே சாப்பிட்டார்.
அப்போது, தனது அருகில் இருந்த சிறுமியிடம் நான் யாரென்று தெரிகிறதா என்று முதல்வர் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி, ”தெரியும், ஸ்டாலின் தாத்தா” என்று பதிலளித்தார்.
இதனைக் கேட்டவுடன் ஸ்டாலின் தாத்தா இல்ல, வெறும் ஸ்டாலின்தான் என்று சிரிப்புடன் உரையாடினார். தற்போது இந்த காணொலி இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பசியோடு பள்ளிக்குச் செல்லக்கூடாது. காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. காலை உணவுத் திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது.” எனத் தெரிவித்தார்.
மேலும், மத்திய பாஜக அரசு அரசியலுக்காக அவசர நிலையை பற்றி இப்போது நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால், அவசர நிலையின்போது, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை, ஒன்றிய அரசு தற்போது மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.