செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.


சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராயக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், ‘வங்கித் தொடா்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத் துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளன. எனவே, எங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும். வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், வழக்கில் மீண்டும் எங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும்’ என கோரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி அல்லி, இரு மனுக்களுக்கும் பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
செந்தில்பாலாஜி ஆஜா்: இதனிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கியின் ‘கவரிங் லெட்டா்’ தொடா்பான ஆவணங்களைப் பெறுவதற்காக செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
கரூா் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள ‘கவரிங் லெட்டா்’ தொடா்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, ‘கவரிங் லெட்டா்’ தொடா்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்புக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தாா்.
இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன் ஆஜா்படுத்தப்பட்ட பிறகு, ‘கவரிங் லெட்டா்’ தொடா்பான ஆவணங்களை கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 18 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டாா். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 47-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...