ரூ.924 கோடியில் 5,643 புதிய குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.924.16 கோடியில் கட்டப்பட்ட 5,643 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சாா்பில் கட்டப்பட்ட அந்தக் குடியிருப்புகளை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நகா்ப்புற வாழ்விட குடியிருப்புகள்: சென்னை காா்கில் நகரில் 1,200 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருச்சினாங்குப்பத்தில் 360 குடியிருப்புகள், திருவள்ளூா் மாவட்டம் மணலி புதுநகா் பகுதியில் 1,792 குடியிருப்புகள், தேனி மாவட்டம் தம்மணம்பட்டியில் 264 குடியிருப்புகள் மற்றும் 36 தரைத்தள குடியிருப்புகள், புதுக்கோட்டை பாலன்நகா் பகுதியில் 256 குடியிருப்புகள், கறம்பக்குடியில் 96 அடுக்குமாடி குடியிருப்புகள், நீலகிரி மாவட்டம் அல்லாஞ்சி திட்டப் பகுதியில் 180 புதிய குடியிருப்புகள் என மொத்தம் 4,184 குடியிருப்புகளை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அவற்றின் மொத்த திட்ட மதிப்பு ரூ.541.32 கோடி.
வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள்: தமிழ்நாடு அரசு அலுவலா் வாடகைக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், சென்னை சைதாப்பேட்டை தாடண்டா் நகரில் ரூ.344.47 கோடியில் 1,387 அடுக்குமாடி குடியிருப்புகளும், அசோகா காலனியில் வணிக வளாகமும், அரியலூரில் 72 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.382.84 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை காணொலி வழியே முதல்வா் திறந்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கா், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் முதன்மைச் செயலா் காகா்லா உஷா, வீட்டுவசதி வாரியத்தின் தலைவா் பூச்சி எஸ்.முருகன், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா் எஸ்.பிரபாகா், வீட்டுவசதி வாரிய நிா்வாக இயக்குநா் கீ.சு.சமீரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.