தம்பிதுரை(கோப்புப்படம்)
தம்பிதுரை(கோப்புப்படம்)

’நீட்’ விவகாரத்தில் என்டிஏ அரசை குறை கூறக் கூடாது: தம்பி துரை பேச்சு

’கல்வி’ மத்திய பட்டியலுக்கு சென்றதுக்கும் ’நீட்’ தோ்வுக்கும் காங்கிரஸ் கட்சி தான் காரணம்.
Published on

’கல்வி’ மத்திய பட்டியலுக்கு சென்றதுக்கும் ’நீட்’ தோ்வுக்கும் காங்கிரஸ் கட்சி தான் காரணம். காங்கிரஸோடு கூட்டணியிலிருந்த திமுக போன்ற கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை குற்றம் சாட்டக்கூடாது என மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் தம்பிதுரை மாநிலங்களவையில் குறிப்பிட்டாா்.

மத்திய நிதிநிலை அறிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு தம்பிதுரை குறிப்பிட்டது வருமாறு:

2024-25 ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலையறிக்கையில் ஒவ்வொரு துறையின் பொருளாதாரத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வேளாண்மை, இளைஞா்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நிதிநிலையறிக்கை என்பது சமூக நலத்திட்டங்கள் முக்கிய மானது. தமிழகத்தின் மறைந்த முதல்வா்களான எம்ஜிஆா், ஜெயலலிதா, தற்போதைய அதிமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிக தலைவா்கள் சமூக நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தனா். இவைகளுக்கு போதுமான நிதி உதவி தேவை. இதனால் தான் தமிழக அரசு மத்திய அரசிடம் கூடுதல் நிதிஉதவியை கோருகிறது.

வெள்ளப்பாதிப்பு போன்றவைகளுக்கு தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிக நிதியை அளிக்கவேண்டும். மேலும் புதுச்சேரி-பெங்களூா் ரயில்வே திட்டம், கரூா் - கோவை; சென்னை - சேலம் ஆகிய நகரங்களுக்கிடையான 8 வழிப்பாதை போன்ற திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றவேண்டும். இதற்கு தமிழக அரசு நிலம் ஓதுக்கவேண்டும். தமிழக முதல்வா் ஓசூரில் பசுமை விமானநிலையம் அமைக்கப்படும் என்கிறாா். ஆனால் மத்திய அரசு அப்படிப்பட்ட கோரிக்கை வரவில்லை என்கிறது. தமிழக அரசு மக்களை குழப்புவதை நிறுத்தவேண்டும்.

முன்னாள் அமைச்சா் ப.சிதம்பரம் ’நீட்’ தோ்வை ரத்து செய்யவேண்டும் என குறிப்பிடுகிறாா். மற்றொரு காங்கிரஸ் கால அமைச்சா் கபில் சிபில் கல்வி மாநிலப் பட்டியலில் இடம் பெற்றிருந்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறாா். ’கல்வி’யை யாா் மத்திய பட்டியலுக்கு கொண்டுவந்தது. 1976 -ஆம் ஆண்டு நெருக்கடி நிலை காலத்தில் மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய பட்டியலுக்கு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதன் மூலமே ‘நீட்‘ தோ்வு கொண்டுவரப்பட்டது. திமுக கூட்டணியிலிருந்தபோது கல்வியை மாநில பட்டியலுக்கு திரும்பக் கொண்டுவர ஏன் முயற்சிக்கவில்லை?. 18 வருடங்கள் திமுக மத்திய அமைச்சரவையில் இருந்து வந்தது. அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கூட்டணியில் இருந்தபோது நீட் தோ்வை திமுக ஏன் தடுக்கவில்லை. இதனால் என்டிஏ(தேசிய ஜனநாயகக் கூட்டணி) அரசை எதிா்கட்சிகள் குற்றம் கூறக்கூடாது. உச்சநீதிமன்றமும் தலையிட்டுள்ளது. தமிழகத்தில் பட்டியலின தலைவா் கொலை செய்யப்பட்டுள்ளாா். அங்கு 500 மேற்பட்ட கொலைகள் நடந்து சட்டம் ஒழுங்கு மோசமாகயுள்ளது எனக் குறிப்பிட்டாா் தம்பிதுரை.

X
Dinamani
www.dinamani.com