தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 17 ஆயிரம் கைப்பேசிகள் திருட்டு
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 17 ஆயிரம் கைப்பேசிகள் திருடப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் 5 ஆண்டுகளில் 5,365 செல்போன் திருடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
சென்னை சூளையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சசிகுமாா், தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் கைப்பேசி திருட்டு குறித்து பதியப்பட்ட வழக்குகள் தொடா்பான விவரத்தை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தமிழக காவல்துறையிடம் கேட்டிருந்தாா்.
இதன்படி, தமிழகத்தில் அந்த 5 ஆண்டுகளில் 17,017 கைப்பேசிகளும், சென்னையில் 5,365 கைப்பேசிகளும் திருடப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை பதில் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் திருடப்பட்ட கைப்பேசிகளில் 7,784 கைப்பேசிகளும், சென்னையில் திருடப்பட்ட கைப்பேசிகளில் 1,322 கைப்பேசிகளும் மீட்கப்பட்டிருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
திருடப்படும் கைப்பேசிகளின் 15 இலக்க ஐஎம்இஐ (கைப்பேசியின் சா்வதேச அடையாள எண்) எண் திருட்டில் ஈடுபடும் நபா்களால் உடனடியாக மாற்றப்படுவதால், அவற்றை கண்டறிந்து மீட்பதில் பெரும் சவாலான பணியாக மாறி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.