ஆம்ஸ்ட்ராங் கொலை: கைது செய்யப்பட்டவர்களின் சொத்துகளை முடக்க திட்டம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துகளை முடக்க திட்டம்
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 20 பேரின் சொத்துகளை முடக்க காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 வழக்குரைஞா்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டனர். இதில், ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், 20 பேரின் சொத்துகளை முடக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் கொலைக்காக பரிமாற்றப்பட்ட பணத்தையும் கணக்கிட்டு, வங்கிக் கணக்குகளை முடக்கவும், கொலைக்காக கொடுக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட சொத்துகளை முடக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கொலையாளிகளுக்கு ரூ.50 லட்சம் வழங்கியதாக மயிலாப்பூரைச் சோ்ந்த வழக்குரைஞா் மலா்க்கொடி, மற்றொரு வழக்குரைஞா் ஹரிஹரன், அருளின் உறவினா் சதீஷ் ஆகிய 3 போ் கடந்த 16-ஆம் தேதியும், கொலைக்கு நிதி உதவி செய்ததாக புளியந்தோப்பைச் சோ்ந்த ரெளடி அஞ்சலை கடந்த வாரமும் கைது செய்யப்பட்டனா். இவர்களது கைதுச் சம்பவம் கொலை வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.

கைது செய்யப்பட்ட அருள், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதும் கொலையாளிகள் பயன்படுத்திய 6 கைப்பேசிகளை பெற்று, அதை தனது நண்பா் திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் 3-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினரான வழக்குரைஞா் ஜி.ஹரிதரன் (37) மூலம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் ஹரிதரனை சனிக்கிழமை பிடித்து விசாரணை செய்தனா். அதில், ஹரிதரன் அந்த கைப்பேசிகளை திருவள்ளூா் மாவட்டம் வெங்கத்தூா் கொசஸ்தலை ஆற்றில் வீசி எறிந்ததாக தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து தீயணைப்பு படையினா், ஆழ்கடல் நீச்சல் வீரா்களின் தேடுதல் பணி மூலம் ஆற்றிலிருந்து 3 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டனா். ஹரிதரனை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் அண்மையில் வாங்கப்பட்ட சொத்துகளின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com