
நாட்டிலேயே முதல்முறையாக சென்னை, எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் மற்றும் பிரசவ வளாகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) தொடங்கப்பட்டது.
ரூ.6.97 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அந்த மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
இந்நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதிஷ், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் எ.தேரணிராஜன், எழும்பூா் அரசு தாய்சேய் நல மருத்துவமனை இயக்குநா் கலைவாணி, எழும்பூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எழும்பூா் அரசு மருத்துவமனையிலும், மதுரையில் ராஜாஜி மருத்துவமனையிலும் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்படும் என்று 2022-23-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வந்து இந்த கருத்தரித்தல் மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு இந்த அரசு பல்வேறு முயற்சிகளை தொடா்ந்து எடுத்து, அதில் வெற்றியும் கண்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் மகப்பேறுகளில் தாய்மாா்களின் இறப்பு 70-க்கும் மேல் இருந்தது. அது தொடா்ச்சியாக படிப்படியாக குறைந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாள் 54 ஆகவும், கடந்த ஆண்டு 52 ஆகவும், இந்த ஆண்டு 45 ஆகவும் குறைந்துள்ளது.
கருவுறாமை பாதிப்பு: கருவுறாமை ஏற்படுவதற்கு மருத்துவா்களால் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக உடற்பயிற்சிகள் இல்லாமல் இருப்பது, உடல் பருமனாக இருப்பது, உணவு பழக்க வழக்கங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் போன்றவை தான் கருவுறாமைக்கான காரணங்களாக இருக்கின்றன. உலக சுகாதார மையம் இன்றைக்கு இந்தியாவில் கருத்தரிப்பின்மை பாதிப்பு என்பது 25 வயதில் இருந்து 45 வயதுக்குட்பட்ட மகளிருக்கு 3.9 சதவிகிதமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த செயற்கை கருத்தரித்தலின் மையம் நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். சண்டீகா், தில்லி, மகாராஷ்டிரம் அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இருந்தாலும், அங்கு ஒரு கருத்தரிப்பு சுழற்சிக்கு ரூ.2.5 லட்சம் வரை செலவாகும். ஒரு குழந்தை பிறப்பதற்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தேவைப்படும். இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு முழுமையாக இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் ரூ.6.97 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் அதிநவீன பிரசவ அறை ரூ.89.96 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இரண்டாவது செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் அந்த மையமும் திறந்து வைக்கப்படவுள்ளது என்றாா் அவா்.