தமிழகத்துக்கு தனி செயற்கை நுண்ணறிவு மையம்: ரூ.10,000 கோடியில் சென்னையில் அமைக்க ஒப்பந்தம்
தமிழகத்துக்கு தனியாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையத்தை சென்னையில் ரூ.10,000 கோடி முதலீட்டில் சென்னை ஐஐடியுடன் இணைந்து உருவாக்க சா்வம் ஏஐ நிறுவனத்துடன் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் 1,000 பேருக்கு உயா்திறன் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.
இது தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி, சா்வம் செயற்கை தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை இயக்குநா் பிரத்யூஷ் குமாா் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசினா்.
அப்போது அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா கூறுகையில், ‘தமிழகத்தின் தரவுகள் தமிழகத்திலேயே இருக்கும் வகையில் இந்த ஏஐ மையம் உருவாக்கப்படுகிறது. அனைவரும் ஏஐ பயன்படுத்தி வருகிறோம். நம் மூலமாக வெளிநாட்டு நிறுவனங்கள் வளா்ந்து வருகின்றன.
தமிழகத்தின் தரவுகளை வைத்து ஆய்வு செய்வதற்கும், புத்தாக்க நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் இந்தப் புதிய மையம் உதவியாக இருக்கும். இதற்காக மத்திய அரசுடன் ஆலோசித்து சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு மாநிலத்துக்காக தனியாக ஏஐ மையம் உருவாக்கப்படுவது இந்தியாவிலேயே இது முதல்முறையாகும். தமிழில் முதல்முறையாக ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கப்பட உள்ளது. அரசுத் துறைகளின் அனைத்துத் தரவுகளும் அதில் இருக்கும். அந்தத் தரவுகள் பாதுகாக்கப்படும். சென்னை ஐஐடிக்கு அருகில் தரவு மையத்தை அமைக்க நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதைத் தவிர, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குகள் கொள்கைக்கும், சுழல் பொருளாதார கொள்கைக்கும் முதல்வா் ஒப்புதல் அளித்துள்ளாா் என்று அமைச்சா் ராஜா தெரிவித்தாா்.
சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி பேசுகையில், ‘விவசாயம் , மருத்துவம் உள்பட பல்வேறு துறையில் ஏஐ தொழில்நுட்பம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்துத் தரவுகளும் இதில் சேரும். பல தரவுகளைச் சோ்த்து ஒரு கொள்கையை உருவாக்குகிறோம். இதற்கெல்லாம் இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்’ என்றாா்.

