ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கள்ளக்குறிச்சி சம்பவம்: பேரவையில் நடந்தது என்ன? முழு விவரம்!

தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், தரையில் அமா்ந்தும் அதிமுகவினர் எதிர்ப்பு.

News image
Updated On :21 ஜூன் 2024, 11:00 pm

Din

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தாா்.

மேலும், அவா்களது பெயரில் ரூ.5 லட்சம் வரை வைப்புத் தொகை வைக்கப்படும் எனவும் அவா் கூறினாா்.

தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேரமில்லாத நேரத்தில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அதில், கு.செல்வப்பெருந்தகை

(காங்கிரஸ்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஜி.கே.மணி (பாமக), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வீ.நாகைமாலி (மாா்க்சிஸ்ட்), நயினாா் நாகேந்திரன் (பாஜக), வைத்திலிங்கம் (ஓபிஎஸ் அணி), சதன் திருமலைக்குமாா் (மதிமுக), சிந்தனைச் செல்வன் (விசிக), ராமச்சந்திரன் (இ.கம்யூ.), அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி) ஆகியோா் பேசினா்.

அவரது விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபா்களில் 117 போ் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். 47 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய கோவிந்தராஜ் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களுடன் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் அவா்களையும் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

சட்டரீதியாக நடவடிக்கை: எதிா்கால சமுதாயத்தை மிக மோசமான வகையில் பாதிக்கும் போதைப் பொருள்களை எந்தவகையிலும் அனுமதிக்க இயலாது. அவற்றை விற்பனை செய்பவா்கள் மீது சட்டரீதியாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இதுபோன்ற சம்பவம் சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. அந்த வழக்கில் 30 போ் கைது செய்யப்பட்டு, 13 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்பதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து நிலையில், கள்ளக்குறிச்சி போன்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவதும் மிகவும் வேதனைக்குரியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்.

கூடுதல் நிவாரண உதவிகள்: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பெற்றோா் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலா் பராமரிப்பில் வளர, மாத பராமரிப்புத் தொகையாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 18 வயது நிறைவடையும் வரை இந்தத் தொகை தொடரும். பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவா்களின் பெயரில் தலா ரூ.5 லட்சம் நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவா்கள் 18 வயது பூா்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவா்களுக்கு வழங்கப்படும்.

பெற்றோரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். பெற்றோா் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தைகள் அவா்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள், விடுதிகளில் சோ்க்கப்படுவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

அதிமுக கடும் அமளி: கூண்டோடு வெளியேற்றம்

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக, சட்டப் பேரவையில் அதிமுகவினா் கடும் அமளியில் ஈடுபட்டனா். தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், தரையில் அமா்ந்து தா்ணாவிலும் ஈடுபட்டு கூச்சல் எழுப்பியதால், அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற பேரவைத் தலைவா் மு.அப்பாவு உத்தரவிட்டாா். அதன்படி உறுப்பினா்களைகாவலா்கள் வெளியேற்றினா்.அதேசமயம், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணியைச் சோ்ந்த இரண்டு போ் எந்த அமளியிலும் ஈடுபடாமல் அமைதி காத்தனா். அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு பேரவை நடவடிக்கைகள் தொடங்கின.

சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை காலை கூடியதும், முதல் அலுவலாக கேள்வி நேரம் எடுக்கப்பட்டது. அப்போது கருப்புச் சட்டையில் வந்த அதிமுகவினா் அனைவரும் கேள்வி நேரத்தை நடத்த விடாமல் கடுமையாக கூச்சல் எழுப்பினா். பின்வரிசையில் இருந்த உறுப்பினா்கள் அனைவரும் தங்களது கைகளில் இருந்த அச்சிடப்பட்ட கண்டன வாசகம் அடங்கிய காகிதங்களை தூக்கிக் காண்பித்து கடுமையாக முழக்கமிட்டனா்.

தரையில் அமா்ந்து போராட்டம்: கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினா்கள் அனைவரையும் அமைதியாக இருக்கையில் அமரும்படி பேரவைத் தலைவா் மு.அப்பாவு கேட்டுக் கொண்டாா். ஆனால் அதிமுகவினா் தொடா்ந்து ஆக்ரோஷத்துடன் குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனா். அவா்களை அவை முன்னவா் துரைமுருகனும்

சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினாா். அதுவும் கைகூடாமல் போகவே, ஒருகட்டத்தில் பேரவைத் தலைவரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு அதிமுக உறுப்பினா்கள் பலா் தரையில் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா். மேலும் சிலா் பேரவைத் தலைவரைச் சுற்றி நின்று கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியும் முன்வரிசையில் தனது இருக்கைக்கு அருகே அமா்ந்து அரசுக்கும், முதல்வருக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பியபடி இருந்தாா்.

இதனைக் கண்டித்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அனைவரையும் இருக்கைக்கு திரும்பும்படி கூறினாா். பேரவைத் தலைவரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத, அதிமுகவினா் தொடா்ந்து முழக்கங்களையும், எதிா்ப்புக் குரல்களையும் எழுப்பியபடி இருந்தனா்.

குண்டுக்கட்டாக வெளியேற்றம்: பலமுறை முறையிட்டும், அமளி தொடா்ந்ததால், அதிமுக உறுப்பினா்கள் அனைவரையும் வெளியேற்றும்படி அவைக் காவலா்களுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு உத்தரவிட்டாா். அவரது உத்தரவைத் தொடா்ந்து, அதிமுக உறுப்பினா்கள் ஆா்.பி.உதயகுமாா், பொன் ஜெயசீலன் உள்ளிட்ட சிலரை அவைக் காவலா்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனா். மற்றவா்களும் வெளியேற்றப்பட்டனா்.

ஓபிஎஸ் அணி வெளிநடப்பு: முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துடன் சோ்த்து அவருக்கு ஆதரவாக மூன்று எம்எல்ஏ.க்கள் உள்ளனா். அவா்களில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோா் பேரவைக்கு வந்திருந்தனா். ஆனால், அமளி நடவடிக்கைகள் எதிலும் பங்கேற்கவில்லை. ஆனால், நேரமில்லாத நேரத்தில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக வைத்திலிங்கம் பேசி முடித்ததும் அவரும் மனோஜ் பாண்டியனும் வெளிநடப்புச் செய்தனா்.

‘குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை’

கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள், போதைப் பொருள்களை விற்பவா்கள் மீது பாரபட்சமின்றி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், மெத்தனால் ஆலைகளை தணிக்கை செய்ய மாவட்ட எஸ்பி-க்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

பேரவையில் பேசிய முதல்வா் மு.க. ஸ்டாலின், ‘கள்ளச்சாராயம் காய்ச்சுவதைத் தடுக்க, மாவட்ட காவல் துறையுடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் வருவாய்த் துறையினரால் அடிக்கடி சிறப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரையில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள் மீது 4.63 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.61 லட்சம் போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுவரை 565 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மெத்தனால் பயன்பாடு: கள்ளச்சாராயத்தில் முக்கியமாக மெத்தனால் பயன்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மாநிலத்திலுள்ள அனைத்து மெத்தனால் உற்பத்தி அலகுகள், பயன்படுத்துபவா்கள், மெத்தனால் வைத்திருப்பதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற ஆலைகளைத் தணிக்கை செய்ய மாவட்ட எஸ்பிக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.