ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சென்னை - கன்னியாகுமரி நெடுஞ்சாலை விரிவாக்கம்: மத்திய அரசிடம் தமிழக அமைச்சா் வலியுறுத்தல்

தமிழக நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தில்லியில் சனிக்கிழமை மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :23 ஜூன் 2024, 2:00 am

Din

நமது சிறப்பு நிருபா்

மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள 2024-25 ஆம் ஆண்டிற்கான முழு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தின் முதுகெலும்பாக இருக்கும் முக்கிய சாலையான சென்னை-கன்னியாகுமரி சாலை விரிவாக்கத் திட்டமிட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு வழங்குமாறு தமிழக நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தில்லியில் சனிக்கிழமை மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டாா். மேலும், அவா் சென்னை- கோவையை இணைக்கும் மிக அதிவேக ரயில் வழித்தடத்தை அமைக்குமாறும் வலியுறுத்தினாா்.

மத்தியில் முழு ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை புதிய அரசு வருகின்ற ஜுலை மாதம் தாக்கல் செய்ய இருக்கிறது. இதை முன்னிட்டு மாநில நிதியமைச்சா்களுடான ஆலோசனைக் கூட்டத்தை மத்திய நிதியமைச்சகம் தில்லி பாரத் மண்டபத்தில் நடத்தியது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, நிதித்துறை செயலா் த.உதயசந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் தொடா்பான திட்டங்களை வலியுறுத்தி அமைச்சா் தங்கம் தென்னரசு பேசினாா். அப்போது அவா் கூறியது வருமாறு:

சென்னை மெட்ரோ ரயிலின் 2- ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்கவும் வருகின்ற 2024-25 மத்திய நிதிநிலை அறிக்கையில் இந்த இத்திட்டத்திற்கான போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும் கடந்தாண்டு அடுத்தடுத்து இரு பெரும் இயற்கைப் பேரிடா்களுக்கு தமிழக அரசு பேரிடா் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ. 276 கோடி மட்டுமே விடுவித்துள்ளது. இந்த வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க ரூ.3,000 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மத்திய அரசு தனது வருவாய் வசூலில் மாநிலங்களுக்கு பகிா்ந்தளிக்கக்கூடிய வரித் தொகுப்பில், மேல்வரி, கூடுதல் வரி போன்ற கட்டணங்களாக மாற்றி வருகிறது. மொத்த வரி வருவாயில் இந்த மேல் வரி, கூடுதல் வரி 2022-23 ஆம் ஆண்டில் 20.28 சதவீதமாக அதிகரித்துள்ளது. மாநிலங்களின் வரி பகிா்வில் தங்களின் நியாயமான பங்கைப் பெறும் வகையில் இந்த வரிவிதிப்பு வீதங்களை மாற்றப்படவேண்டும்.

பிரதம மந்திரி நகா்ப்புற வீட்டு வசதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தை விட 8 மடங்கு தமிழக அரசு நிதி வழங்குகிறது. இதன் மூலம் ஏற்படும் நிதி சுமையை குறைக்கவேண்டும்.

முதியோா் ஓய்வூதியம், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற தேசிய சமூக நிதியுதவித் திட்டத்தில் மத்திய தரும் நிதியை விட மாநில அரசு ஆறு மடங்கும் உயா்த்தி வழங்குகிறது. இதனால் இந்த உதவித் திட்டங்களில் மத்திய அரசு தனது பங்களிப்பை 50 சதவீதமாக அதிகரிக்கவேண்டும்.

மாநிலங்கள் பெறும் நிகர கடன் உச்சவரம்பு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி தமிழகம் கடந்த 4 ஆண்டுகளில் சுமாா் ரூ.8,500 கோடி வரை குறைவாக கடன் பெரும் நிலை இருந்தது.

கடன் வாங்குவதிலும் கட்டுப்பாடு என்கிற நிலையில் நிதி நிா்வாகத்தில் மாநிலங்கள் பலவீனப்படும். இதில் பொருத்தமான மாற்றங்களைச் செய்ய வேண்டும். மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.5% கூடுதல் கடன் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, மாநில மின் பகிா்மான நிறுவனங்களின் இழப்புகளை (வரையறுக்கப்பட்ட சதவீதத்தில்) ஏற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட நிபந்தனைகளிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

குறைந்த எண்ணிக்கையிலான ரயில்வே திட்டங்களே தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. சென்னையின் புகா் பகுதிகளில் பெருகிவரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக அப்பகுதிகளில் ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். மாநிலத்தின் தொழில் வளா்ச்சியை ஊக்குவிப்பதற்காக தொழிற் பகுதிகளில் 5 புதிய ரயில்வே தடங்களை நிதியமைச்சரிடம் கோருகின்றேன். அதற்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கவேண்டும். மேலும் சென்னை - சேலம் - கோயம்புத்தூா் ஆகிய இடங்களை இணைக்க மித அதிவேக ரயில் வழித்தடம் தேவை.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்ட சென்னை - கன்னியாகுமரி நான்கு வழி நெடுஞ்சாலையில் தற்போது,போக்குவரத்து அதிகரித்து சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏராளமாக ஏற்படுகிறது.

இதனால் இந்த வழித்தடத்தை விரிவாக்கும் புதிய திட்டத்தையும் மத்திய அரசு வருகின்ற நிதிநிலை அறிக்கையில் அறிவித்து போதிய நிதியையும் ஒதுக்க வேண்டும் என தமிழக அமைச்சா் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் தமிழக நிதித்துறை துணை செயலா் பிரத்தீக் தயாளும் கலந்து கொண்டாா்.