பள்ளியிலிருந்து வந்த ஓடிபி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மோசடி!

பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு ஓடிபி அனுப்பி, செல்ஃபோன் எண்கள் உறுதிசெய்யப்பட்டது.
பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
Published on
Updated on
2 min read

அரசு உதவிபெறும் பள்ளிகளில், மானியத்துக்காக போலியான மாணவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின், கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இஎம்ஐஎஸ்) என்ற இணையதளம், பள்ளி மாணவர்களின் இஎம்ஐஎஸ் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் பெற்றோரின் செல்ஃபோன் எண்களை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம், ஒரே செல்ஃபோன் எண் நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் அதிர்ச்சி தரும் வகையில், மாநிலத்தில் ஒரே ஒரு செல்ஃபோன் எண் கிட்டத்தட் 1,240 மாணவர்களுடன் இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலத்தில் ஒரு பெற்றோருக்கு அதிகபட்சமாக மூன்று குழந்தைகளுக்கு மேல் இருப்பதில்லை. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே, பள்ளிக்கு வழங்கப்படும் மானியம் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அமையும் என்பதால், சில பள்ளிகள், மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட போலியான மாணவர்களின் பதிவுகளை உருவாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போலியான பதிவுகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் போன்றவற்றில்தான் அதிகம் நடந்துள்ளது. இதன் அடிப்படையில், சுமார் 20 முதல் 30 லட்சம் செல்ஃபோன் எண்களை கல்வித் துறை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும், கல்வித்துறை மூத்த அதிகாரிகளுக்கு தகவல்களை அனுப்பி, அவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் பேசி, இல்லாத, போலியாக பதிவு செய்த மாணவர்களின் விவரங்களை நீக்குமாறு கேட்டுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை மாணவர்களின் இஎம்ஐஎஸ் எண்ணுடன் 1.16 கோடி செல்ஃபோன் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. 55.35 லட்சம் செல்போன் எண்கள் தலா ஒரு மாணவரின் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. 23.5 லட்சம் எண்கள் இரண்டு மாணவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. 3.23 லட்சம் செல்ஃபோன் எண்கள் மூன்று மாணவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இதில்லாமல், கூடுதலாக, 39,258 செல்ஃபோன் எண்கள் நான்கு மாணவர்களுடனும், 8,377 எண்கள் 5 மாணவர்களுடனும், 11,436 எண்கள் ஆறு மாணவர்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் தகவல்களுடன் பெற்றோரின் செல்போன் எண்களை இணைக்கும்போது ஓடிபி மூலம் உறுதிசெய்துகொள்ளுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டபோதும், இவ்வாறு போலியான மாணவர்களின் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது கிடைத்திருக்கும் தரவுகளில், ஒரு செல்ஃபோன் எண் இரண்டு அல்லது மூன்று மாணவர்களுக்கு மேல் இணைக்கப்பட்டிருந்தால், அவற்றை மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுளள்து. தற்போது, இஎம்ஐஎஸ் இணையதளத்தில், மாணவர்களின் விவரங்களோடு அவர்களது மற்றும் பெற்றோரின் ஆதார் விவரங்களும் அப்டேட் செய்யப்படுகிறது. இதன் மூலம், பள்ளிக் கல்வித் துறையிடம் இருக்கும் மாணவர்களின் விவரங்கள் மிகத் துல்லியமானதாக இருக்கும் வகையில் மேம்படுத்தப்படுவதாகவும், இந்தப் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.

பள்ளி மாணவர்களின் விவரங்களுடன் பெற்றோர் எண்கள் இணைக்கும் பணி முடிவடைந்ததும், மாணவர்களின் வருகை விவரம், தேர்வு முடிவுகள் போன்றவை, பெற்றோரின் வாட்ஸ்ஆப்களுக்கு அனுப்புவதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com