தேர்தல் எதிரொலி: பாஜக - அதிமுக இடையே தொடங்கியது போஸ்டர் போர்

தேர்தல் எதிரொலியாக பாஜக - அதிமுக இடையே தொடங்கியது போஸ்டர் போர்.
தேர்தல் எதிரொலி: பாஜக - அதிமுக இடையே தொடங்கியது போஸ்டர் போர்

புதுச்சேரி: அதிமுக - பாஜக இடையே தேர்தல் கூட்டணி முறிந்தபிறகு, இரு கட்சித் தலைவர்களிடையே அவ்வப்போது வார்த்தைப்போர் வலுத்து வந்த நிலையில், தற்போது போஸ்டர் போர் தொடங்கியிருக்கிறது.

லாஸ்பேட்டையில் பாஜக செயல் நிர்வாகிகள் ஒட்டிய ஒரு போஸ்டர்தான் இந்த போருக்கு பிள்ளையார் சுழி போட்டது. இதற்கு பதிலடியாக அதிமுகவினரும் புதுச்சேரி முழுக்க போஸ்டர் ஒட்டினர்.

சனிக்கிழமை சாலை, லாஸ்பேட்டை மக்கள் விழித்ததே இந்த போஸ்டர்களில்தான் என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது. பாஜக நிர்வாகிகள் வசிக்கும் பகுதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. போஸ்டர் ஒட்டுவது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? இங்கே பெரிய விஷயம்தான். காரணம், புதுவையில் இம்முறை தாமரை என்ற தலைப்பில் பதிவான பாஜக போஸ்டரில் முன்னாள் முதல்வர்களும், அதிமுக பொதுச் செயலாளர்களாக இருந்தவர்களுமான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

மேலும், தரமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக்கொண்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடனடியாக அதிமுகவினர் சும்மா இருப்பார்களா? எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது ஜெயலலிதா அவர்கள்தான். அவர் தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்திருந்ததை பதிவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, புதுவை முதல்வர் ரங்கசாமியின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்திருந்தனர். மேலும், பிரதமர் மோடி இவ்வாறு பேசியதன் மூலம் தமிழக மற்றும் புதுச்சேரி மக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி தொண்டர்கள் வாக்களிக்கத் தயாராகிவிட்டனர் என்று புதுச்சேரி முழுக்க ஒட்டிவிட்டனர்.

தேர்தல் எதிரொலி: பாஜக - அதிமுக இடையே தொடங்கியது போஸ்டர் போர்
மகன் திருமணத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் நீட்டா அம்பானி; நடனமாடிய விடியோ வைரல்

இந்த போஸ்டர் போர் உடனடியாக சமூக வலைத்தளங்களிலும் வெடித்தது. ஒருவருக்கொருவர் கடுமையாக விமரிசித்து கருத்துகளை பதிவிட்டனர். இதன் தொடர்ச்சியாகவே, பாஜக வேட்பாளர் ஏ. நசச்சிவாயம், எம்ஜிஆர் தொப்பியை அணிந்தபடியான ஒரு புகைப்படம் வைரலானது. இதனால், கருத்துமோதல் வெடித்ததைத் தொடர்ந்து புகைப்படம் நீக்கப்பட்டது.

இது குறித்து புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் பேசுகையில், புதுச்சேரியில் பாஜக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டாலும் கூட, ஒருவரும் பாஜக சார்பில் போட்டியிட தயாராக இல்லை. இதனால் வேட்பாளர் தேர்வில் குளறுபடி நீடிக்கிறது. இந்த நிலையில்தான், மோடி எங்கள் கட்சித் தலைவர்களை புகழ்ந்துள்ளார். உண்மையை பேசியிருக்கிறார். எங்கள் கூட்டணியில் இல்லாவிட்டாலும் எங்கள் தலைவர்களை பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறார்கள். மோடி சொன்னதாகக் கூறி எங்கள் தலைவர்கள் படங்களைப் போட்டு வாக்கு கேட்பது சரியல்ல. ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மோசமான அரசியல் வியூகத்தை பாஜக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com