பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

அமைச்சர் அன்பில் மகேஸ் 
அமைச்சர் அன்பில் மகேஸ் 

தஞ்சை: தமிழகத்தில் நடந்து வரும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்த பின்னர் வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நிகழாண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், நிகழாண்டு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

ஒரு பள்ளிக்கு 1 அல்லது 2 மாணவர்கள்தான் பங்கேற்கவில்லை என்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு உயர் அலுவலர்களும் முயற்சி எடுத்தனர்.

கரோனா காலத்தில் பள்ளிக்கு குழந்தைகள் வராத நிலையிலும், அதன் பிறகும் கல்வியில் நாட்டம் செலுத்தாத குழந்தைகளுக்கும் சேர்த்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. கல்வி முறையிலிருந்து குழந்தைகள் வெளியில் சென்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பள்ளிக்கு சரியாக வராத மாணவர்களையும், தேர்வுக்கு முந்தைய ஒரு மாத காலத்தில் தயார்படுத்தினோம். அதையும் புரிந்து கொண்டு சில மாணவர்கள் எழுதினர். சில மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. அந்த நிலைமை மீண்டும் வந்துவிடக்கூடாது என நிகழாண்டு முயற்சி எடுத்து கணிசமான அளவுக்குக் குறைத்துள்ளோம்.

வருங்காலத்தில் தமிழக முதல்வரின் திட்டங்களைக் கூறி பள்ளிக்கு வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை மார்ச் 1 ஆம் தேதியே தொடங்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் இதுவரை 25 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கன்வாடிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3.30 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடிகளிலிருந்து அரசு பள்ளிகளில் முழுமையாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தல் என வரக்கூடிய வதந்திகள் உண்மையாகிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com