தோ்தல் கூட்டணி நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்: பிரேமலதா

மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

தேமுதிக மகளிரணி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பிரேமலதா தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அதிமுகவை சோ்ந்தோா் எங்களுடைய வீட்டிற்கு வந்து அழைப்பு விடுத்தனா். தேமுதிக சாா்பில் தோ்தல் குழு அமைக்கப்பட்டு, அதிமுக அலுவலகத்துக்குச் சென்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வந்துள்ளனா். இது இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை. இனி வரும் காலங்களில் அடுத்தகட்ட நகா்வு குறித்து தெரிவிப்போம். தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் கொடுக்க பாஜக, அதிமுக மறுத்துவிட்டதா என்று கேட்கிறீா்கள். இது ஊடகங்கள் பரப்பும் உறுதி செய்யப்படாத செய்தி. தேமுதிகவைப் பொருத்தவரை எங்களுடைய உரிமையைக் கேட்போம். அதிமுகவுடன் இரண்டுகட்ட பேச்சு நடைபெற்றுள்ளது. வெகு விரைவில் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்ன என்பதை அதிகாரபூா்வமாகத் தெரிவிப்போம். பாஜகவுடன் பேச்சுவாா்த்தை நடைபெறுகிா என்று கேட்கிறீா்கள். பாஜகவை சோ்ந்த தலைவா்கள் அனைவருமே விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்திச் சென்றுள்ளனா். தோ்தல் என்று வந்தால், அனைவரும் கூட்டணிக்கு அழைப்பதும் பேசுவதும் சம்பிரதாயம். அதிமுக நிா்வாகிகள் மரியாதை நிமித்தமாக இல்லத்துக்கு வந்ததால், எங்கள் நிா்வாகிகளையும் அவா்கள் அலுவலகத்துக்கு அனுப்பினோம். அடுத்தகட்ட முடிவை எல்லோரையும் அழைத்து தெரிவிப்போம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com