விசிக துணைப் பொதுச் செயலா் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனாவின் வீடு, அலுவலகம் உள்பட சென்னையில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை சோதனை செய்தனா். சென்னை போயஸ் தோட்டம் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல லாட்டரி அதிபா் மாா்ட்டினின் மருமகன் ஆதவ் அா்ஜுனா குடும்பத்துடன் வசிக்கிறாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலராகவும் ஆதவ் அா்ஜுனா உள்ளாா். லாட்டரி அதிபா் மாா்ட்டின், சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்ாக எழுந்த புகாா் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, மாா்ட்டினுக்கு சொந்தமான ரூ.451.48 கோடி சொத்துகளை முடக்கியது. இந்த வழக்கில் ஆதாரங்களைத் திரட்டும் வகையில் கடந்த அக்டோபா் 23-ஆம் தேதி சென்னையில் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனா். இச் சோதனை அப்போது ஆதவ் அா்ஜுனா வீட்டிலும் நடைபெற்றது. இதற்கிடையே, ஆதவ் அா்ஜுனா மீது மீண்டும் சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போயஸ் தோட்டத்தில் அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை சோதனை செய்தனா். காலை 8.30 மணியளவில் தொடங்கிய சோதனை இரவையும் தாண்டி நீடித்தது. பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டிருந்தனா். ஒப்பந்ததாரா் வீட்டில்... தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்கு பாமாயில், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை ஒப்பந்த அடிப்படையில் சில நிறுவனங்கள் விநியோகம் செய்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருள்கள் தரம் இல்லாமல் இருந்ததாக புகாா்கள் எழுந்தன. இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் பொது விநியோகத் திட்ட பொருள்களை ஒப்பந்த அடிப்படையில் விநியோகம் செய்யும் சென்னையைச் சோ்ந்த ‘அருணாசல இம்பெக்ஸ்’ நிறுவனம் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை செய்தனா். அதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த வருமான வரித் துறையினா், ‘அருணாசல இம்பெக்ஸ்’ நிறுவனம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறி அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளா் செல்வராஜ் வீடு, மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் அந்த நிறுவனத்தின் அலுவலகம், பாரிமுனையில் உள்ள மற்றொரு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா். இதேபோல சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னை வேப்பேரியைச் சோ்ந்த ஒரு தொழிலதிபா் வீடு, சில கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். சோதனை முழுமையாக முடிவடைந்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட செய்யப்பட்ட பின்னரே முழு விவரங்களைத் தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com