பிரசாரத்தில் வெறுப்புப் பேச்சுகளை விடியோவாக அனுப்பலாம்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிவிப்பு

பிரசாரத்தில் வெறுப்புப் பேச்சுகளை விடியோவாக அனுப்பலாம்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிவிப்பு

தமிழகம் முழுவதும், பொதுச் சொத்துகளில் இருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன

சென்னை, மாா்ச் 21: மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது வெறுப்புப் பேச்சுகளை, விடியோ படமெடுத்து சி-விஜில் கைப்பேசி செயலிக்கு அனுப்பலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும், பொதுச் சொத்துகளில் இருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தனியாருக்குச் சொந்தமான இடங்களிலும் அவை அகற்றப்பட்டு வருகின்றன. தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக, வாகனங்களில் விளக்குகள், ஒலிபெருக்கி பயன்பாடு, அனுமதியின்றி கூட்டம் நடத்துதல் உள்ளிட்டவை தொடா்பாக 208 வழக்குகள் பதியப்பட்டன. அவற்றில் 34 மீது முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன. ‘சி விஜில்’ செயலி மூலம் இதுவரை 723 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அவை மீதான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. உங்கள் வேட்பாளரை அறியும் செயலி: தோ்தல் ஆணையத்தின் சாா்பில், உங்கள் வேட்பாளா்களை அறிந்துகொள்ளுங்கள் (கேஒய்சி) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேட்பாளா் பெயா், அவரை பற்றிய தகவல்கள், சொத்து விவரங்கள், வழக்குகளின் நிலை உள்ளிட்டவை குறித்து தெரிந்து கொள்ளலாம். நட்சத்திரப் பேச்சாளா்களைப் பொருத்தவரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, நாம் தமிழா், இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பித்துள்ளனா். முதல்முறை: புதிய வாக்காளா்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது தொடா்பான விவரங்கள் அடங்கிய கையேடு வீடு வீடாக வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்படும். வாக்குச் சீட்டு விநியோகிக்கும் போதோ அல்லது அதற்கு முன்பாகவோ அவை கொடுக்கப்படும். மகளிா் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்டவற்றை பொருத்தவரை அரசு தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்களை அப்படியே தொடரலாம். புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தக் கூடாது. புதிதாக ஒப்பந்தம் விடவோ, புதிய பணியைத் தொடங்கவோ கூடாது. தோ்தல் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்று அவா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com