திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்த அதிமுக: முதல்வர் ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்த அதிமுக: முதல்வர் ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை அதிமுக ஜெராக்ஸ் எடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் ச.முரசொலியையும், நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு உரையாற்றினார்.

அதில், தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும், “சொல்வதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்!” இதுதான் வரலாறு! சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை செய்துகாட்டியிருப்பவன்தான், இந்த ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!”

நேற்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்! ஆட்சிப் பொறுப்பு கையில் வைத்திருந்தபோது, மக்களுக்கு ஒன்றுமே செய்யாத பழனிசாமி - ஒன்றிய அரசில் பா.ஜ.க.-வுடன் சேர்ந்து, தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாமல், துரோகங்களை மட்டுமே செய்த பழனிசாமி – அவர் பங்கிற்கு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அவரிடம் அதிகாரம் இருந்தபோது, ஒன்றிய அரசிடம் இருந்து உருப்படியாக எதையாவது பெற்றுத் தந்தாரா?

’‘ஆளுநரை நியமிக்கும்போது, முதலமைச்சரின் ஆலோசனை பெற்று நியமனம் செய்ய வேண்டும்” என்று தி.மு.க. சொன்னதையே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்.

தி.மு.க. அரசுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறாரே ஆளுநர்… அவரைக் கண்டித்து ஒருநாளாவது ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறீர்களா? இல்லையே!

அ.தி.மு.க. ஆட்சியில், ஆளுநர் ஆய்வுக்குச் செல்கிறேன் என்று புறப்பட்டபோது, அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது தி.மு.க.!

தொல்லை தருவதையே தன்னுடைய அன்றாடப் பணியாக வைத்திருக்கும் ஆளுநருக்கு எதிராக இப்போதும் உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று போராடுகிறது தி.மு.க.!

மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை; அந்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஓட்டு போட்டதால்தான் அந்தச் சட்டமே இன்றைக்கு அமலுக்கு வந்திருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் வரக் காரணமாக இருந்துவிட்டு, ‘இலங்கை தமிழர்களுக்கான இரட்டைக் குடியுரிமை கொண்டு வருவோம்’ - என்று சொல்வதற்குப் பெயர் என்ன? பித்தலாட்டம்தானே!

மதுரையில் நிறுவப்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்படுமாம்!” - பழனிசாமி சொல்கிறார்.

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் திறப்பு விழாவில் மோடி பட்டன் அழுத்தியபோது பக்கத்தில் உட்கார்ந்து கை தட்டினீர்களே… அதற்குப் பிறகு எய்ம்ஸ் அமைக்காமல் ஏன் இழுத்தடிக்கிறீர்கள் என்று ஒரு முறையாவது ஒன்றிய அரசின் கதவைத் தட்டியிருப்பீர்களா?

இவ்வளவு ஆண்டுகளாக இது எதையுமே செய்யாமல் இப்போது வந்து நீங்கள் போடும் இந்த பகல் வேஷம் பா.ஜ.க.-வுக்கான பசப்பு நாடகம்தான் என்று மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com