அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தத் தடை: ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு

போடிநாயக்கனூர் அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம்
போடிநாயக்கனூர் அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம்

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த அனுமதி கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக-வின் பெயா், கொடி, சின்னம், லெட்டா் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீா்செல்வத்துக்கு தடை விதிக்க கோரி பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சாா்பில் கடந்த ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயா், கொடி, சின்னம், லெட்டா் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீா்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18- ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவில், ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் காலாவதியாகி விட்டதா, இல்லையா. இதுகுறித்து நிலுவையில் உள்ள பிரதான வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்னை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டா்களோ புகாா் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்ததாக தனது மேல் முறையீட்டு மனுவில் ஓபிஎஸ் கூறியுள்ளாா். மேலும், அதிமுகவின் பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமியை தோ்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் மேல் முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆா். சுப்ரமணியன் மற்றும் ஆா்.சக்திவேல் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் மேல்முறையீட்டு மனு குறித்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டது. அத்துடன் வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com