போராட்டக்காரராக வாழ்ந்து மறைந்த கணேசமூர்த்தி!

மூன்று முறை மக்களவை உறுப்பினர், ஒரு முறை சட்டப்பேரவை உறுப்பினர் பதவி வகித்தவர்.
கணேசமூர்த்தி
கணேசமூர்த்தி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று கால சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கணேசமூர்த்தி.

வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. ஈரோடு தொகுதியில் திமுக நேரடியாக களம் காணும் நிலையில், திமுக வேட்பாளரின் அறிமுகக் கூட்டம் போன்ற தேர்தல் பணியில் கணேசமூர்த்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி வீட்டில் கணேசமூர்த்தி மூர்த்தி விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டுவிட்டதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் உடல் நலம் கருதி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஈரோடு நகர காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்பி கணேசமூர்த்தி உடல்நலம் குறித்து மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ ஆகியோர் விசாரித்துவிட்டு குடும்பத்தினருக்கு நம்பிக்கை தெரிவித்து சென்றனர்.

72 மணி சிகிச்சைக்கு பிறகுதான் உடல்நலம் குறித்து முழுமையாக தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 5:15 மணியளவில் எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ஈரோடு நகரப் போலீசார் எம்பி கணேசமூர்த்தி உடலைப் பெற்று பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருக்கின்றனர்.

உயிரிழந்த கணேசமூர்த்தி தான் அரசியல் கட்சி நிர்வாகியாக மட்டுமின்றி சமூக ஆர்வலராகவும், விவசாயிகள் நலன் சார்ந்து விவசாயிகளின் பல்வேறு போராட்டத்தில் பங்கேற்று அவர்களுக்கு உரிய தீர்வை பெற்று தந்துள்ளார். குறிப்பாக கெயில், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் விவசாய விளை நிலங்கள் வழியாக குழாய்ப் பதிக்க விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றும் உரிய தீர்வு கண்டு உள்ளார்.

எம்.பி. கணேசமூர்த்தி பற்றிய சுயவிவரங்கள்

பெயர்: அ.கணேசமூர்த்தி

சொந்த ஊர்: குமார வலசு, சென்னிமலை ஒன்றியம், பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்.

பிறந்த ஆண்டு:10/06/1947

பெற்றோர்

தந்தை: அவினாசிக் கவுண்டர்

தாய்: சாரதாம்பாள்

மனைவி: (லேட்) சு.பாலாமணி

குழந்தைகள்

மகள்: தமிழ்பிரியா

மகன்: க. கபிலன்(இருவருக்கும் திருமணமாகிவிட்டது)

படிப்பு: இளங்கலை பி.ஏ. தியாகராயர் கல்லூரி. சென்னை

சட்டப்படிப்பு - சட்டக்கல்லூரி, சென்னை

வழங்கப்பட்ட பொறுப்புகள்/ஏற்றுக் கொண்ட பணிகள்

1978-ஆம் ஆண்டு திமுகவில் மாநில மாணவரணி இணை அமைப்பாளர்

1984ஆம் ஆண்டு மாவட்ட தி.மு.க.செயலாளரானார்.

1989ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரானார்

1993ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோவுடன் வெளியேறினார்.

1998ஆம் ஆண்டு பழனி மக்களவைத் தொகுதி உறுப்பினர்

2002ஆம் ஆண்டு பொடாவில் ஈரோடு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு 555 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.

2009 - 2014 மற்றும் 2019 - 2024ஆம் ஆண்டு வரை ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com