நிதிச் சவால்களுக்கு இடையே 4-ஆவது ஆண்டில் திமுக அரசு!

நிதிச் சவால்களுக்கு இடையே 4-ஆவது ஆண்டில் திமுக அரசு!

கடும் நிதிச் சவால்களுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

சமூகத் திட்டங்களுக்கான நிதியை, செலவுகளாகப் பார்க்கவில்லை என தமிழக அரசு கூறினாலும் அதனைத் திரட்டுவதற்காக கடுமையான போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் அரசுக்கான கடன் சுமை ரூ.8.33 லட்சம் கோடியாக உயரும் என்ற நிலையும் உள்ளது.

2021-ஆம் ஆண்டு அதாவது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சியைப் பிடித்த போது அது எளிமையான நகர்த்தலாக திமுகவுக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கவில்லை. 2021-இல் ஆட்சியில் அமர்ந்த போது, கரோனா எனும் தீநுண்மி பரவல் உச்சத்தில் இருந்தது. இதற்கான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளே ஆட்சியின் முதல் பொறுப்பாக இருந்தது. அதேசமயம், தேர்தல் நேரத்தில் மக்களுக் காக அளித்த வாக்குறுதிகளையும்கொஞ் சம் கொஞ்சமாக நிறைவேற்றத்தொடங் கியது.

ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே, அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், ஆவின் பால் விலை குறைப்பு உள்பட ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில் கையொப்பமிட்டு அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நேரடித் திட்டங்கள்: தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களைத் தாண்டி, மக்களுடன் அரசுத் துறைகள் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையிலான திட்டங்களும் கடந்த 3 ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியைத் தொடர்வதற்கான திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

கரோனா காலத்தில் பள்ளிக் கல்வியை விடாமல் தொடர்ந்து படிக்க வகை செய்த "இல்லம் தேடி கல்வி', கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கும் "புதுமைப் பெண்' திட்டம், மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் "நான் முதல்வன்' திட்டம் போன்றவை கல்வித் துறை சார்ந்த திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்துடன், உடல் நலத்தைப் பேணும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்', "இன்னுயிர் காப்போம்' போன்ற திட்டங்கள் அரசின் சுகாதார சேவைகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்க வழிவகுத்தன.கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் மட்டுமின்றி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் பணிகளையும் அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இதற்காக புதிய தொழிற்சாலைகள் திறக்கும் பணிகளை அரசு முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது.

74,757 பேருக்கு வேலை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இதுவரையிலும் 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதுடன், 27 ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்ததால், 74 ஆயிரத்து 757 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டன.

இந்த மாநாடுகள் மூலமாக மட்டும் ரூ.9.61 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அதன் வழியே 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழி ஏற்படும் எனவும் தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.

உற்பத்தித் துறையில் தமிழ்நாடு முன்னிலை பெற்று விளங்குகிறது; அதேசமயம், அவற்றை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம் வகிக்கிறது. இதற்கான தரவுகளை மத்திய அரசின் பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தோல் பொருள்கள், மின்னணு உற்பத்திப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், ஜவுளித் துணிகள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரிசை கட்டும் பிற மாநிலங்கள்: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டுவரும் சில முத்திரைத் திட்டங்கள், மற்ற மாநிலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, முதல்வரின் காலை உணவுத் திட்டத்தையும், பள்ளிக் கல்வித் துறை சார்ந்த புதிய உத்திகளையும் தெலங்கானா, பிகார் மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். அவர்களும் தங்களது மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த ஆயத்தமாகி வருகிறார்கள்.

இதனிடையே, தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டம் போன்றே கனடாவில் மாணவர்களின் பசி ஆற்றும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இப்படி பல்வேறு தரப்பினரையும் ஈர்க்கும் திட்டங்கள் ஆச்சரியக்குறிகளாக இருந்தாலும், ஒரு சில பிரிவினரை திருப்திபடுத்தக் கூடிய திட்டங்கள் செயலாக்கத்துக்கு வராமல் இருக்கின்றன.

மகளிருக்கு சிலிண்டர் விலை குறைப்பு, டீசல் விலை குறைப்பு, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது போன்றவை எப்போது என்பதே அந்தந்தத் தரப்பினர் முன்வைக்கும் வினாக்களாக இருக்கின்றன.

கடும் நிதிச் சிக்கல்: கவனத்தைக் கவரும் பல முத்திரைத் திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு பெரும் நிதியை செலவிட்டு வருகிறது. அதேசமயம், மாநிலத்தின் வருவாய் வரவுகளில் இருந்து கிடைக்கும் நிதிகளும் குறைந்தே வருகின்றன. மத்திய அரசு தமிழகத்துக்கான நிதிப் பங்கினை உரிய முறையில் தரவில்லை எனவும் அதனைக் கேட்டுப் பெற தினம் தினம் போராடி வருவதாகவும் முதல்வரும், நிதித் துறை சார்ந்த அதிகாரிகளும் கூறுகிறார்கள். இதனால், பல்வேறு திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதியை கடன்கள் பெற்றே செயல்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியால், நிகழ் நிதியாண்டின் இறுதியில் அரசுக்கான கடன் சுமை ரூ.8.33 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறையும் ரூ.44 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரிக்கக் கூடும்.

இதுபோன்று கடுமையான நிதி நெருக்கடி, செலவு பிடிக்கும் முக்கிய திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிதியைத் திரட்டுவது என சிக்கல்கள் நிறைந்த பாதையில், மக்களுக்கான நலத் திட்டங்கள் எனும் சிறு வெளிச்சத்தைப் பற்றி தமிழக அரசு நடைபோட்டு வருகிறது.

மத்தியில் நமக்கான அரசு வரும் போது, மாநிலத்துக்கான நிதியை உரிய வகையில் கேட்டுப் பெறுவோம் என மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். அவரது கூற்றுப்படி, மத்தியில் இருந்து அதிக நிதியைப் பெற்று அடுத்த இரண்டு ஆண்டுகளும் தமிழ்நாடு சீரான பொருளாதார வளர்ச்சிப் பாதையில் பயணிக்குமா? இல்லையா? என்பது அடுத்த 26 நாள்களில் (வாக்கு எண்ணிக்கை தினமான ஜூன் 4) தெரிய வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com