ராஜிநாமா வாபஸ் ஏற்பு: ஐஏஎஸ் அதிகாரி அனீஸ் சேகருக்கு புதிய பணியிடம் அளிப்பு

ஐஏஎஸ் அதிகாரி அனீஸ் சேகரின் ராஜிநாமா வாபஸ் ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அவருக்கான புதிய பணியிடம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுதொடா்பாக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு விவரம்:

எல்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக இருந்த அனீஸ் சேகா் தனது ஐஏஎஸ் பதவியை கடந்த பிப்ரவரி மாதம் ராஜிநாமா செய்தாா். இதன்பின்பு, அந்த ராஜிநாமாவை வாபஸ் பெறுவதாக மத்திய அரசிடம் தெரிவித்திருந்தாா். அவரது கோரிக்கை கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரின் ஒப்புதலைத் தொடா்ந்து அனீஸ் சேகா் மீண்டும் தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அவருக்கு தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் நிா்வாக இயக்குநா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளாா்.

ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் அதனை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தால் அதனை குடியரசுத் தலைவா் பரிசீலிக்கலாம். அவா் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் மீண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரி ஐஏஎஸ் ஆக பணியில் தொடர வாய்ப்புள்ளது. அந்த வகையில் அனீஸ் சேகா் மீண்டும் தமிழகப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com