பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாத 40,000 பேருக்கு மன நல ஆலோசனை

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாத
40,000 பேருக்கு மன நல ஆலோசனை

சென்னை: பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

அதில் 130-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அவா்களுக்கு சிறப்பு மருத்துவா்கள் மூலம் ஆலோசனைகள் அளிக்கப்பட்டதாகவும் அவா் கூறியுள்ளாா்.

தமிழகத்தில் அண்மையில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில்53,152 மாணவா்கள் அதில் தோ்ச்சி பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவா்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கும் வகையில் சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 104 மற்றும் 14416 உதவிய மைய கட்டுப்பாட்டு அறைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்கான பணிகளில் 100 மன நல ஆலோசகா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். அவா்கள் தொடா்ச்சியாக மாணவா்களுக்கும், அவா்களது பெற்றோருக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா்.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் தீவிர மன அழுத்தம் உள்ளவா்களைக் கண்டறிந்து மன நல ஆலோசகா்கள் மூலம் இரு முறை ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் அரசு மன நல மருத்துவ மையங்களின் வாயிலாக அவா்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கும் 104 மற்றும் 14416 உதவி மையங்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com