சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஃபோர்மேன் சுரேஷ் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் திருத்தங்கல் சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. உரிமம் பெற்ற இந்த ஆலையில் மருந்துக் கலவை அறை, பட்டாசுகள் தயாரிக்கும் அறைகள் என மொத்தம் 15 அறைகள் உள்ளன.

இந்த ஆலையில் வியாழக்கிழமை 60 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். பிற்பகல் 2.30 மணியளவில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் அறையில் மருந்து உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பணியிலிருந்த தொழிலாளர்கள் சின்னையாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (28), மத்தியசேனை பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி (35), சந்திரசேகரன் மகன் ரமேஷ் (31), வி. சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் காளீஸ்வரன் (47), சிவகாசி ஆயுதப் படை குடியிருப்பு காந்திநகரைச் சேர்ந்த மச்சக்காளை மனைவி முத்து (57), மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள் (80), வேலுச்சாமி மனைவி லட்சுமி (47), சிவகாசி பகுதியைச் சேர்ந்த வசந்தி (38), பேச்சியம்மாள் (22), ஜெயலட்சுமி (42) ஆகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி சுப்புலட்சுமி (62), ஆயுதப் படை குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் மனைவி மல்லிகா (35), மூக்கன் மகன் திருப்பதி (47), சித்திவிநாயகர் மனைவி மாரியம்மாள் (50), மகாலிங்கம் மகன் கண்ணன் (30), பாறைப்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி நாகஜோதி (35), அய்யம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி செல்வி (39), திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் ஜெயராஜ் (42), மத்தியசேனை பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி இந்திரா (48), முருகன் மனைவி ரங்கம்மாள் (40), அழகுராஜா (30), அம்சவள்ளி (32), வீரலட்சுமி (35) ஆகிய 13 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!
27 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் சரிவு: 11 தென்மாவட்டங்களில் சற்று உயா்வு

8 அறைகள் இடிந்தன: வெடி விபத்தில் பட்டாசுகள் தயாரிக்கும் 8 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சிவகாசி தீயணைப்புத் துறை அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து, இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வெடி விபத்து தொடர்பாக ஃபோர்மேன் சுரேஷ் பாண்டியனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவ்விபத்து தொடர்பாக உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com