தீபாவளி முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதால் பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகையொட்டி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த புதன்கிழமை முதலிலே வரத் தொடங்கினர்.
வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில் இன்று தங்கள் பணிபுரியும் இடத்திற்கு பொதுமக்கள் செல்லத் துவக்கி உள்ளனர்.
இதன் காரணமாக பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பிலும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் சார்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ரயில்களில் அதிக அளவில் கூட்டம் இருக்கும் என்பதால் தெற்கு ரயில்வே துறை சார்பில் சிறப்பு ரயில்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை முதலிலே ஏராளமான பயணிகள் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கின்றனர்.
இதேபோல சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் பேருந்துகளை இடம் பிடிக்க அலை மோதி வருகிறது. பெங்களூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஏற்கனவே முன்பதிவு செய்து பேருந்துக்காக காத்திருந்து பயணித்து வருகின்றனர்.