
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து விவகாரத்தைக் கண்டித்தும் பணியில் உள்ள மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறியும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற சிகிச்சைகள் அளிக்கப்படாது. அனைத்து துறை அரசு மருத்துவர்களும் காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளியின் உறவினர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்து தீவிரி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.