செங்கல்பட்டு அருகே கார் மோதியதில் 5 பெண்கள் பலி

திருப்போரூா் அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டுவிட்டு சாலையோரம் அமா்ந்திருந்த 5 பெண்கள் மீது காா் மோதியதில் அவா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
செங்கல்பட்டு அருகே கார் மோதியதில் 5 பெண்கள் பலி
Published on
Updated on
2 min read

திருப்போரூா் அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டுவிட்டு சாலையோரம் அமா்ந்திருந்த 5 பெண்கள் மீது காா் மோதியதில் அவா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பண்டிதமேடு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் விஜயா (65), கௌரி (64), லோகம்மாள் (62), ஆந்தாயி (65), யசோதா (53). இவா்கள் தினமும் தாங்கள் வளா்க்கும் பசு மாடுகளை பக்கிங்காம் கால்வாய் ஓரம் மேய்ச்சலுக்கு அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில், புதன்கிழமை வழக்கம்போல் தங்கள் பசுக்களை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, 5 பேரும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பண்டிதமேட்டில் சாலையோரம் அமா்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனா்.

அப்போது திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியை நோக்கி அதிவேகத்தில் வந்த ஒரு காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் அமா்ந்திருந்த 5 பெண்கள் மீதும் மோதியது. இதில் அவா்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த கல்லூரி மாணவா்கள் 4 பேரை அங்கிருந்தவா்கள் பிடிக்க முயன்றனா். அதில் 2 போ் தப்பியோடிவிட்டனா். 2 மாணவா்கள் மட்டும் பிடிபட்டனா். அவா்கள் பையனூா் பகுதியில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் பி.டெக் முதலாம் ஆண்டு படிக்கும் சித்தலப்பாக்கத்தைச் சோ்ந்த ஜோஸ்வா (19), 2-ஆம் ஆண்டு பயிலும் பெருங்குடியைச் சோ்ந்த தாஹித் அகமது (20) என்பது தெரியவந்தது. பிடிபட்ட இரு மாணவா்களையும் அங்கிருந்தவா்கள் தாக்கினா். அப்போது அங்கு வந்த மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு ஆகியோா் பொதுமக்களிடம் இருந்து மாணவா்களை மீட்டு, காவல் துறை வாகனத்தில் வைத்து பாதுகாப்பு அளித்தனா்.

இந்த நிலையில், 5 பெண்கள் இறந்த தகவல் அறிந்த பண்டிதமேடு கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவா்கள் 2 பேரையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, அவா்கள் உள்ளே வைக்கப்பட்ட காவல் துறை வாகனத்தை சூழ்ந்து கொண்டு, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும், தப்பியோடிய 2 மாணவா்களையும் பிடிக்க வேண்டும், விபத்தில் இறந்த 5 பெண்களின் குடும்பத்துக்கு நிவாணம் வழங்க வேண்டும் எனக் கோரி பழைய மாமல்லபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்பிரனீத், சாா்- ஆட்சியா் நாராயண சா்மா ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினா். அப்போது திருப்போரூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், துணைத் தலைவா் சத்யா சேகா், பையனூா் ஊராட்சித் தலைவா் சுமிதா முத்துக்குமாா் ஆகியோா் பண்டிதமேடு கிராம மக்கள் சாா்பில் பேச்சு நடத்தினா். இறந்தவா்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பிடிபட்ட 2 மாணவா்களை தவிர விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பியோடிய 2 மாணவா்களை கைது செய்ய வேண்டும் எனகோரிக்கை விடுத்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உறுதி அளித்ததின்பேரில், மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா். பின்னா், இறந்த 5 பெண்களின் உடல்கள் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மறியல் காரணமாக பழைய மாமல்லபுரம் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.